Breaking
Tue. Nov 5th, 2024

கடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை வெளியிடும்போது முடிவுகளை தாமததப்படுத்துமாறு யாரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. அவ்வாறு அழுத்தம் பிரயோகிக்க எனது அறைக்கு யாராவது வந்திருந்ததால் அவர்கள் திரும்பிப் போயிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு நாங்கள் தைரியத்துடன் இருந்தோம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கடந்த தேர்தலின்போது எனது மனச்சாட்சிக்கு அமைய மக்களின் இறைமைய பாதுகாப்பதற்காக செயற்பட்டேன். அதாவது தங்கள் வாக்குகளை பிரயோகிப்பதன் மூலம் நாட்டின் ஆட்சியில் தாக்கம் செலுத்த முடியும் என்பதனை மக்களுக்கு எடுத்துரைத்தோம். அதில் வெற்றியும் பெற்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவோ மைத்திரிபால சிறிசேனவோ யார் வெற்றிப்போகின்றனர் என்பது எங்களுக்கு சிக்கலாக இருக்கவில்லை. மாறாக மக்களின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் தேர்தல் வாக்கெடுப்பில் நம்பிக்கை வைக்கவேண்டும். இவையே எங்கள் கனவாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் பணியாற்றிய தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பாராட்டும் விசேட நிகழ்வு ஒன்று நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனநாயகத்துக்கான தொழில்சார் வல்லுனர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பேராசிரியர்கள் அரச உயர் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எனக்கு ஒரு கனவு இருந்தது
தேர்தல் திணைக்களத்துக்கு பணியாற்றவந்தபோது எனக்கு ஒரு கனவு இருந்தது. தேர்தல் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. எமது நாட்டு மக்களுக்கு வாக்களிப்பு மீது நம்பிக்கையிருக்கவில்லை. அந்த நம்பிக்கையை உருவாக்கவேண்டும் என்பதே எனது கனவாகும்.
மூன்று விடயங்கள்
வாக்காளர்களுக்கு முதலாவதாக தேர்தல் வாக்கெடுப்பு மீது நம்பிக்கையிருக்கவில்லை. இரண்டாவதாக தேர்தல் முடிவுகளில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. மூன்றாவதாக தேர்தல் வாக்களிப்பதில் தமக்கு என்ன பயன் என்பதாகும். இந்த மூன்று விடயங்கள் தொடர்பாக நாம் கவனம் செலுத்தினோம்.
வாக்கு உங்களின் உரிமை
அந்தவகையில் மக்களுக்கு தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் காணப்படுகின்ற நம்பிக்கையின்மையை போக்கி மக்களை வாக்களிக்கு நிலையத்துக்கு அழைத்து வரவேண்டும் என்பதற்காக பாடுபட்டோம். மக்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டுவருவதற்காக “” வாக்கு உங்களின் உரிமை ” என்ற தொனிப்பொருளில் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போதே இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.
“தண்ணீர் கொண்டு வாருங்கள் ”
யாழ்ப்பாணத்தில் எனக்கு வேலை செய்த அனுபவம் உள்ளது. 1998 ஆம் ஆண்டு என்னை யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளராக நியமித்தனர். அப்போது எனக்கு “உட்காருங்கள்” மற்றும் ” தண்ணீர் கொண்டு வாருங்கள் ” என்ற இரண்டு சொற்கள் மட்டுமே தமிழிலில் தெரிந்திருந்தது. ஆனாலும் நான் அங்கு பணியாற்றினேன்.
வெற்றி குறித்து கவலையில்லை
கடந்த ஜனாதிபதி தேர்தல் யார் வெற்றிபெறுவது என்பது எமக்கு ஒரு விடயமாகவே இருக்கவில்லை. மாறாக தேர்தலை நம்பிக்கைமிக்கதாக நடத்துவதே எமது தேவையாக இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவோ மைத்திரிபால சிறிசேனவோ யார் வெற்றிப்போகின்றனர் என்பது எங்களுக்கு சிக்கலாக இருக்கவில்லை. மாறாக மக்களின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் தேர்தல் வாக்கெடுப்பில் நம்பிக்கை வைக்கவேண்டும். இவையே எங்கள் கனவாக இருந்தது.
இந்தியாவில் போன்று…
இந்தியாவில் தேர்தல் என்பது அந்நாட்டின் மிக முக்கிய விடயங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் அவ்வாறான நிலையை கொண்டுவர முடியாது என்று நான் பல தடவை சிந்தித்துள்ளேன். ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் எம்மை விமர்சித்தன.
ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் முகவராக செயற்பட்ட தற்போதைய அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ எம்மில் நம்பி்க்கை வைத்திருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் எங்களில் நம்பி்க்கை வைத்திருந்தனர். தேர்தல் நெருங்கும்போது எதிர்க்கட்சிகளும் எம்மில் நம்பிக்கை வைத்திருந்தன.
மனச்சாட்சிக்கு எதிராக
செயற்பட முடியாது
நான் எனது பணியை முன்னெடுக்கும்போது மூன்று விடயங்ளை அடிப்படையாகக்கொண்டிருந்தேன். அதாவது மக்களின் அபிலாஷைகள் அரசியலைமைப்பு மற்றும் எனது மனச்சாட்சி என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டே எனது பணிகளை முன்னெடுத்தேன். எங்களால் மனச்சாட்சிக்கு எதிராக செயற்பட முடியாது.
தலையில் சுடும் கட்டளை
காலில் சுடாமல் தலையில் சுடுமாறு நான் இயல்பாக கூறியிருந்தேன் அந்தக் கூற்று நன்றாக வேலை செய்தது. அந்தவகையில் மக்கள் அச்சப்படாமல் நம்பிக்கையுடன் வாக்களிப்பதற்கான சூழலை உருவாக்கினோம். இளைஞர் யுவதிகளும் சமூக வலைதளங்கள் ஊடாக அரசியலில் பாரிய அக்கறை செலுத்தியிருந்தனர்.
இறைமையை உறுதிபடுத்தினோம்.
மக்களின் விருப்பம் என்பதே இறைமையாகும். அரசர் காலத்தில் இது இருக்கவில்லை. அக்காலத்தில் அரசர்களே நாட்டின் உரிமையாளர்கள் போன்று செயற்பட்டனர். அதனால்தான் வௌ்ளையர்களுக்கு நாட்டை கொடுத்தனர். ஆனால் தற்போது அவ்வாறில்லை. மக்களுக்கு இறைமை காணப்படுகின்றது. அதாவது வடக்கையும் கிழக்கையும் கொடுக்கவேண்டும் என்றால் ஜனாதிபதியினால் முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் போதாது. மாறாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதுதான் மக்களின் இறைமை என்பதாகும். மக்களின் அந்த இறைமையை நாங்கள் உறுதிபடுத்தினோம்.
மக்கள் வாக்களிக்கவேண்டும்
வாக்களிக்காமல் மக்கள் இருக்கக்கூடாது. நிராகரிக்கவாவது வாக்களிக்கவேண்டும். இலத்திரனியல் வாக்களிப்பு முறை வரும்போது அதில் நிராகரிப்பு என்ற அம்சத்தையும் இணைத்துக்கொள்ளுமாறு நான் கூறியுள்ளேன். கடந்த தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
வந்திருந்தால் போயிருக்கமாட்டார்கள்
இதேவேளை தேர்தல் தினத்தன்று இரவு முடிவுகளை வெளியிடும்போது முடிவுகளை தாமததப்படுத்துமாறு யாரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. அவ்வாறு அழுத்தம் பிரயோகிக்க எனது அறைக்கு யாராவது வந்திருந்ததால் அவர்கள் திரும்பிப் போயிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு நாங்கள் தைரியத்துடன் இருந்தோம் என்றார்.

Related Post