உயர் தேசிய கணக்கீடு டிப்ளோமா பாடநெறி தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த நிலையிலேயே மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது தேவையற்றதாகும் எனத் தெரிவித்துள்ள உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல.
இது தொடர்பான முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படுமென்றும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
கடந்த 29 ஆம் திகதி உயர் தேசிய கணக்கீடு டிப்ளோமா பாடநெறி தொடர்பாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதன்போது அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. உயர் தேசிய கணக்கீடு டிப்ளோமாவுக்கு பட்டப்படிப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கான சுற்று நிருபம் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் அந்த அந்தஸ்தினை வழங்குவதை இரத்துச் செய்துள்ளனர்.
புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வி அமைச்சு ஊடாக அரச நிர்வாக அமைச்சிற்கு உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறிக்கு பட்டப்படிப்பு அந்தஸ்தை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தினோம்.
இவ்வாறு கோரிக்கைகளை வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது அர்த்தமற்ற செயற்பாடாகும்.