ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மேல்முறையீட்டு வழக்கு விவாதத்தில் தேவையில்லாதவற்றை பேசி, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஷ் ராவ் தரப்பு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு விட்ட நிலையில், அவரது உதவியாளர் ஆனந்த் இன்னும் கொஞ்சம் வாதத்தை எடுத்து வைக்க வேண்டியுள்ளது என்று கூறியதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து நீதிபதி குமாரசாமி அனுமதி வழங்கினார் என்றும் தெரிகிறது..
வழக்கறிஞர் ஆனந்த், ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்ட வருமானம், நமது எம்ஜிஆர் நாளிதழ் வருமானம் ஆகியவை குறைத்து மதிப்பிடப்பட்டு உள்ளதாகக் கூறியதாகத் தெரிய வருகிறது. இதைக்கேட்ட நீதிபதி குமார சாமி இதுக்குறித்து ஏற்கனவே வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில் இனி இப்படி தேவையில்லாதவற்றைப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று 14 வது நாளாக ஜெயலலிதா தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், இத்துடன் ஜெயலலிதா தரப்பு வாதங்கள் முடிவடைந்து இன்று முதல் சசிகலா தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது.