Breaking
Mon. Dec 23rd, 2024

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாடுகளை சீராக ஒழுங்குபடுத்தும் பல்வேறு திட்டங்களை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், குறித்த நிறுவனங்களுக்கான முறையான சட்டவரைபை உருவாக்கி, சூழலுக்கு ஏற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், அவற்றின் நிர்வாகங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு பிரதான நடவடிக்கையை எடுத்துள்ளது.

நிறுவனங்களின் சட்டவரைபு  உட்பட ஏனைய செயற்பாடுகளை ஒருமிக்கச் செய்யும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, ஏர்னஸ்ட் அன்ட் யோங் நிறுவனம் (Earnest & Yong) தயாரித்த மதிப்பீட்டு ஆய்வு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று (22) அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கையளிக்கப்பட்டதுடன், இது தொடர்பான குழு ரீதியிலான கலந்துரையாடல்களும் அங்கு இடம்பெற்றன. 

இந்தக் கலந்துரையாடலின் போது, நிறுவனங்களின் வரைபு (Institution Framework), சட்ட  வரைபு (Legal Framework), நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் ஏனைய விடயங்கள் (Registration and other issues) குறித்து வளவாளர்களால் விபரிக்கப்பட்டது. அத்துடன், இலங்கையில் சுமார் 10 இலட்சம் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் தொழிற்படுவதாகவும்  அங்கு கூறப்பட்டது.

இந்த நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.டீ.ரஞ்சித் அசோக, மேலதிக செயலாளர் எம்.ஏ.சாஜிதீன் மற்றும் வளவாளர் ஹசித்த விஜயசுந்தர ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

 

Related Post