Breaking
Sun. Jan 12th, 2025

-முர்ஷிட் கல்குடா-

கண்டி பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் சில நாட்களாக பாராமுகமாக இருந்தது கவலைக்குரிய விடயம். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்களின் பின்னர் விசாரணை இடம்பெற்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,  கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

கண்டி பிரச்சனை தொடர்பில் பாராளுமன்ற திண்னையில் அமர்ந்திருந்து எமது சமூகத்தை காப்பாற்ற சண்டை போட்டோம். இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்ற திண்னையில் அமர்ந்திருந்து குரல் இட்ட நாட்கள் இந்த தடவையாகத்தான் இருக்கும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்ட பிரச்சனை மற்றைய மாவட்டங்களிலும் இடம்பெறக் கூடாது என்பதற்காக இந்த போராட்டத்தை மேற்கொண்டோம். முஸ்லிம்கள் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி இருந்தால் இந்தப் பிரச்சனை இவ்வாறு ஏற்பட்டிருக்காது. இந்த நிகழ்வு இலங்கை நாட்டுக்கு ஒரு அபகீர்த்தியை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அம்பாறை மற்று கண்டிச் சம்பவம் போன்று இந்த நாட்டில் இன்னுமொரு இன முறுகலை எதிர்காலத்தில் ஏட்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற மனநிலைமை எங்களிடத்தில் இருக்க வேண்டும். நாம் பெரும்பான்மை சமூகத்தினருடம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்கின்ற உணர்வுடன் பழக வேண்டும். இதனை மீறினால் எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கு பாரிய பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

 

ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிஸின் வட்டாரக் குழு தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி முதலாம் வட்டாரம், ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரம், ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மற்றும் ஓட்டமாவடி பிஃ2 ஆகிய நான்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 197 தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அமைச்சின் பதினைந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் ஓடாவி உபகரணம், மேசன் உபகரணம், இடியப்பம் அவிக்கும் உபகரணம், கேஸ் அடுப்பு, மண் வெட்டி, மீனவர் காப்பக மேலங்கி, எண்ணெய் தெளிக்கும் கருவி, தண்ணீர் பம், மீன் பெட்டி, கொம்றேஸர் உட்பட்ட பல உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 

 

Related Post