அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாத்து தேசிய தொழின்முயற்சியாளர்களைப் பலப்படுத்தும் பொறுப்பை தனிப்பட்ட முறையில் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தேசிய தொழின்முயற்சியாளர்களைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு கொள்கையையும் அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அண்மையில் (11) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற இளம் தொழின்முயற்சியாளர்கள் சங்கத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஆயிரம் கருத்துக்கள் உருவாகும் இடத்தில் மிகவும் சரியான ஒரு கருத்தைத் தெரிவு செய்து செயற்படுவது அபிவிருத்தியின் ஒரு கோட்பாடகும் என்பதால் சகல தேசிய தொழின் முயற்சியாளர்களும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி செயற்படுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கம் தொடர்பாக நிலவும் நல்ல கருத்துக்களைப் போன்றே எதிரான கருத்துக்கள் தொடர்பாகவும் தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சில ஊடகங்களும் எதிர்தரப்பு அரசியல்வாதிகளும் சில குறுகிய சிந்தனையை உடையவர்களும் பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பட்டார்.
தேசிய தொழில் முயற்சியாளர்கள் எப்போதும் சரியானவற்றையும் தேவையானவற்றையும் தெரிவு செய்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கு தேசிய வர்த்தகர்களின் குரலை தட்டியெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தாய் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக தங்களது அறிவு மற்றும் அனுபவங்களை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் இளம் இலங்கை தொழில் முயற்சியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் நவின் பெரேரா மற்றும் புதிய தலைவர் கசுன் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தனர்.
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர மற்றும் இளம் தொழின்முயற்சியாளர் சங்கத்தின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.