Breaking
Fri. Nov 15th, 2024

நாட்டின் சிறந்த முன்னணி நிதி நிறுவனமாகத் திகழ்ந்த சமூர்த்தி நிதி நிறுவனம் குறித்து எவ்வித மதிப்பீடுகளையும் செய்யாத கடந்த கால எதேச்சாதிகார ஆட்சியும் நிர்வாகமும் அந்த நிகழ்ச்சித்திட்டங்களையும் ஊழியர்களையும் பாதாளத்தில் தள்ளும் வகையில் பில்லியன் கணக்கான நிதியினை கொள்ளையடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாடெங்கிலும் உள்ள சமூர்த்தி முகாமையாளர்கள் முகம்கொடுத்துள்ள தொழில் ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்காக அகில இலங்கை சமூர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தினர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி திருப்திகரமற்ற ஒரு அரச நிறுவனமாக மாறியுள்ள சமூர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் பயனுறுதி வாய்ந்ததாகவும் உற்பத்தித்திறன் மிக்கதாகவும் மாற்றி நாட்டுக்குப் பயனுள்ள ஒரு நிறுவனமாக மாற்றும் வகையில் ஜனாதிபதி கவனம்செலுத்த வேண்டும் என அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாமை, 2013ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க திவிநெகும சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள், திவிநெகும திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு சுமார் 3 வருடமாகியும் இதுவரையில் எந்தவொரு ஊழியருக்கும் ஓய்வூதிய சம்பளம் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இதன்போது அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேபோன்று தொழிற்சங்கங்களின் பொறுப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துக்களை முன்வைத்த ஜனாதிபதி, ஒரு தொழிற்சங்கத்தின் அடிப்படை நோக்கம் பிரச்சினைகளை ஏற்படுத்துவதன்றி பிரச்சினைகளைத் தீர்த்து முன்செல்வதாகும் என்றும் குறிப்பிட்டார்.

By

Related Post