Breaking
Mon. Dec 23rd, 2024

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு பணியாளர்களுக்கு அந்நாட்டில் தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு ஏனைய தொழில் வாய்ப்பு சந்தை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததினாலேயே தற்போதய நிலை ஏற்பட்டது. எரிபொருள் நிலை வீழ்ச்சி ஒரு வருடத்திற்கு முன்னரிலிருந்தே ஆரம்பித்தது. இந்த நிலை கடந்த காலங்களில் பெரும் பொருளாதார நெருக்கடியை அந்நாட்டில் தோற்றுவித்தது. கடந்த சில வருடங்களாக மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்புக்காக செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவடைய ஆரம்பித்தது.

வெளிநாட்டு தொழில் வாய்ப்பில் நாம் வேறு தொழில் வாய்ப்பு சந்தைகளை நாடிவருகின்றோம். எமக்கு சிறந்த தொழில்வாய்ப்பு சந்தை கிடைக்கும் என்று நாம் நம்புகின்றோம். அதனால் இந்த தருணத்தினை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்கின்றோம். இலங்கைக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சவூதி ரியாத்தில் சாட் ட்ரேடிவ் (Saad Trading Company) நிறுவனத்தில் பணியாற்றிய 12 பேர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்கள் தொடர்பில் ரியாத்திலுள்ள தூதரக அலுவலகம் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்கு உணவு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நிதியுதவி வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிறுவனம் இவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை ரியாத்தில் அமைந்துள்ள சவூதி ஓஜர் (Saudi Oger Company) என்ற நிறுவனத்தில் இலங்கையர் 100 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களும் இந்தப் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 40 பேர் தற்போது ரியாத்திலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர்களுக்கும் உணவு வசதிகள் தூதரக அலுவலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

By

Related Post