அதிக பாராளுமன்ற ஆசனங்களைப் பெறத்தவறும் கட்சி எதுவாக இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைவர் தமது தலைவர் பதவியை கௌரவமான முறையில், காலம் தாழ்த்தாது இராஜினாமாச் செய்துவிட்டு, பொது முஸ்லிம் தலைமைத்துவத்துக்கு விசுவாசமாக உழைக்கும் ஒரு தொண்டனாக, விருப்பத்துடன் செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கூறினார்.
பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தொடர்பாக அக்கரைப்பற்றில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறப்போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் இரண்டு காரணங்களுக்காக முஸ்லிம் சமூகத்துக்கு முக்கியமானதாகும். அவற்றில் ஒன்று முஸ்லிம் இனத்துவேஷியான மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் எதிர்த்து முழு முஸ்லிம் சமூகமும் தமக்கு விருப்பமான அரசாங்க ஆதரவுக் கட்சி ஒன்றுக்கு வாக்களித்து ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கத்தை உருவாக்கிப் பலப்படுத்தவது. அவற்றில் மற்றது முஸ்லிம் அரசியல் கட்சிகள், குழுக்கள் அனைத்தையும் ஒரே முஸ்லிம் தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைப்படுத்துவது.
இவ்வாறு ஒற்றுமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், குழுக்களினதும் தலைமைப் பதவி இந்தப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கப் போகின்ற முஸ்லிம் கட்சிக்கே உரித்துடையதாகும். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சியின் தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அந்தக் கட்சியின் அரசியலமைப்பு சகல முஸ்லிம் அரசியல் கட்சிகள், குழுக்களின் சிபாரிசுகளை கருத்துக்கெடுத்து உருவாக்கப்படவேண்டும். அதிக பாராளுமன்ற ஆசனங்களைப் பெறத்தவறும் கட்சி எதுவாக இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைவர் தமது தலைவர் பதவியை கௌரவமான முறையில், காலம் தாழ்த்தாது இராஜினாமாச் செய்துவிட்டு, பொது முஸ்லிம் தலைமைத்துவத்துக்கு விசுவாசமாக உழைக்கும் ஒரு தொண்டனாக, விருப்பத்துடன் செயற்பட முன்வரவேண்டும்.
எனவே இந்தப் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவ சிந்தனையிலும், போக்கிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென முஸ்லிம்கள் விரும்பினால், தமது வாக்குகளை தகுமான தலைவரை உடைய கட்சிக்கு வாக்களிப்பது கடமையாகும் என மேலும் தெரிவித்தார்.