மு. கா. வேட்பாளர்களே ! சிங்கள பகுதிகளில் வாக்குகளை தேடுங்கள் !
முன்னால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் தற்போதைய அகிலக் இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பட்டியல் வேட்பாளரருமான ஜெமீல் அவர்கள் நேற்றைய தினம் சாய்ந்தமருது கட்சி ஆதரவாளர்களை சந்தித்து அம்பாறை மாவட்ட தற்போதைய அரசியல் களநிலவரங்களை பற்றி கருத்து தெரிவித்து உரையாற்றுகையில் கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் கூறியதாவது
நேற்றைய முன்தினம் ஸ்ரீ. மு. கா. தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் அமபாறை முஸ்லிம் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போது “ முஸ்லிம்களின் இரண்டாம் கட்ட நிம்மதி மயில் கட்சி காரர்களை தோற்கடிப்பதில் தான் உள்ளது” என்று பகிரங்கமாக மேடையில் முழங்கியிருப்பதன் மூலம் தமது தோல்வி மனப்பாங்கை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஒரு கட்சி தலைமை தமது கடந்த கால சேவைகளை மக்கள் முன் எடுத்துக் காட்டி, முஸ்லிம்களுக்கு ஆபத்து வந்த போதெல்லாம் தாம் எவ்வாறு செயல்பட்டு தம் சமூகத்தை அந்த ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றிய வரலாற்றை பெருமையாக மேடைகளில் எடுத்துக் கூறி, கடந்த தேர்தலில் மக்கள் தமது கட்சியை ஆதரித்தமைக்கான பிரதியுபகாரத்தை மக்களுக்கு நினைவூட்டி, அதன் மூலமே தம்மை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வாக்குகளை கேட்க வேண்டும். ஒரு பொறுப்புள்ள சமூக தலைமை இவ்வாறு தான் செயற்படும்.
தமது கட்சிக்கு முகவரி தேடித் தந்த கிழக்கில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதை உணர்ந்து சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மருதமுனை, அட்டாளைச்சேனை போன்ற அனைத்து முஸ்லிம் பகுதிகளில் இருந்தும் தமது கட்சியின் அற்ப சொற்ப ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி “வன்னியில் இருந்து வந்து அம்பாறையில் ஓட்டு கேற்கும் மயில் கட்சி காரர்களை தோற்கடிப்பதில் தான் முஸ்லிம்களுக்கு இரண்டாம் கட்ட நிம்மதி ஏற்படும்” என்று மக்கள் மத்தியில் கூக்குரல் இடுவது மயில் கட்சியின் அலையில் மு. கா. அள்ளுண்டு போகும் அறிகுறிகள் தலைவர் ரவூப் ஹகீமுக்கு தெரியவர ஆரம்பித்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
சிங்களப் பகுதிகளில் ஓட்டுக் கேற்க வியூகம் வகுத்த தலைவர்
மேலும் அம்பாறை மாவட்டத்தின் சிங்கள வாக்காளர் பகுதியான தெகியத்தை கண்டியில் ஸ்ரீ. மு. காங்கிரஸின் 30 கட்சி காரியலங்களில் திறந்து வைத்து சிங்கள மக்களின் வாக்குகளை திரட்ட தாம் வியூகம் வகுத்துள்ளதாகவும், சிலவேளை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை விடவும் தெகியத்தை கண்டிய போன்ற சிங்கள பகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெறக் கூடிய சந்தர்ப்பம் உண்டு என்று ரவூப் ஹக்கீமின் வாயாலேயே உளறி இருப்பது அவரது மேடைப் பேச்சில் அவர் தெரிவித்த மிகப் பெரிய நகைப்பாக (ஜோக்) என்று கிழக்கின் புத்தி ஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
முஸ்லிம் பகுதிகளில் தாம் இழந்து வரும் செல்வாக்கை சிங்கள பகுதிகளின் ஊடாக ஈடு செய்ய அவரது கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல அவர் வகுத்த வியூகம் இந்த வருடத்தின் சிறந்த அரசியல் வியூகம் என்றும் சாணாக்கியம் என்றும் அவர் கட்சிக் காரர்கள் ஆரவாரிக்கின்றனர்.
ஒரு சமூகத் தலைமையின் அஸ்தமனத்தின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்துள்ளதை இவ்விடயங்கள் சுட்டிக் காட்டுகின்றது. என்றும் தெரிவித்தார்.
தொகுப்பு:- அபு சுஐப்