Breaking
Tue. Jan 7th, 2025
தமிழ்- முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகளை ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸீர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதைக் கேட்டு என்னுள்ளம் பூரிப்படைகின்றது. 30 வருடகாலம் ஒரே மொழியைப் பேசுகின்ற நாம் பிரிந்து பிளவுபட்டுச் சின்னா பின்னமாகி இழக்க வேண்டியவை அனைத்தையும் இழந்து இன்று மீண்டும் குடிசைகளையும் கடைகளையும் பாடசாலைகளையும் கட்டுகின்ற சமூகமாக மாறிப்போயிருக்கின்றோம். விரும்பியோ விரும்பாமலோ கடந்தகால கசப்புணர்வுகளை நாங்கள் மறந்து புதிய பாதையிலே பயணிக்க வேண்டும்.

தமிழ் பேசும் சமூகம் கிழக்கிலே ஒன்றுபட்டு வாழ்வதைப்போல வடக்கிலும் சகவாழ்வு வாழ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்.

தமிழ் பேசும் சமூகங்கள் பலவீனப்பட்டு அழிய முடியாது. இழப்பதற்கு இனி எதுவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் எங்களோடு இது விடயமாகப் பேச முன் வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டும். இதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள். ஒன்றிணைவோம் வாருங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அன்றைய பேரினவாதத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கியதனால் ஆயுதமேந்திப் போராட வேண்டிய துரதிருஷ்டம் ஏற்பட்டது.

இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30,40 வருடங்களுக்குப் பற்றியெரியும் என்பதை நான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் சொல்லியிருக்கின்றேன்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழ் மக்களின் அதிக பட்ச ஆதரைவப் பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்ற விடயத்திலே எங்களுடன் பேச வேண்டும். நாங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து இந்தத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற தருணம் இப்போது வந்துள்ளது என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

Related Post