தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று(28.12.2016) புதன்கிழமை நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடக நண்பர்களை நான் அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு நாங்கள் ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாடட்டையும் என்மீது சுமத்தும் ஒரு கேவலமான வேலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு சிலர் அவர்கள் பேசுவது தலைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாமல் பேசுகின்றார்கள்.
ஒரு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எவ்வாறு பேச வேண்டும். அல்லது மாவட்ட மட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எப்படி பேசவேண்டும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாமல் பேசுகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்கள் என்ற ரீதியில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அபிவிருத்தி வேலைகளை செய்து முடிக்க வேண்டிய சங்கடமான சவாலான நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
இந் நிலையில் இந்த மாகாண சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அதிகாரிகளையும் மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைப்பது போன்று நிறுத்தி அவர்களை சங்கடப்படுத்தும் அளவுக்கு கேள்விகளை கேட்டு அவமானப்படுத்துகின்ற நிலைமையையும் நீண்டகாலமாக அவதானித்து வருகின்றோம்.
ஒரே விடயத்தைதான் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தொடர்ந்து பேசுகின்றனர்.
ஒரு விடயத்தை மாகாண சபைக்கு பொறுப்பானதா அல்லது மத்திய அரசுக்கு பொறுப்பானதா என்று பார்க்காமல் பேசுவார்கள்.
பிரதேச மட்டத்தில் ஒரு தொலைபேசி அழைப்பில் அதிகாரிகளுடன் இலகுவாக தீர்க்க கூடிய சிறிய பிரச்சினைகளையும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் மாவட்;ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் பேசி அதை ஊதிப் பெருப்பிக்கும் வகையில் நாகரீகமிலி;லாமல் இவர்கள் நடந்து கொள்வதையிட்டு கவலையடைகின்றேன்.
மக்களை ஏமாற்றும் வகையில் ஊடகங்களுக்காகவே பேசுகின்றனர். இதனால்தான் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர்களான நாங்கள் தீர்மானித்தோம் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் ஆரம்பத்தில் ஊடகவியலாளர்கள் பங்கு பற்றி விட்டு பின்னர் முடிவுகளை கூட்ட தீர்மானங்களை கூட்டம் முடிந்ததன் பின்னர் கூறவேண்டும் என தீர்மானித்தோம்.
அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது எனக்குரிய பிரச்சினையல்ல அது இந்த மாவட்டத்தின் பிரச்சினையாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒNரு விடயத்தை எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக மாவட்;ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாறி மாறி ஒரே விடயத்தை ஊடகங்களில் தனது முகம் வரவேண்டும் என்பதற்காக பேசாமல் மக்களுக்காக பேசுங்கள் என நான் அவர்களுக்கு ஆலோசனை கூறி வைக்க விரும்புகின்றேன்.
மாகாண சபை உறுப்பினர்கள் தமது அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களை மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் உரத்து பேசுகின்றார்கள். ஏதோ அரசாங்கம் தவறு விட்டது போல அதிகாரிகள் தவறுவிட்டது போல பேசுகின்றார்கள்.
அடிப்படையிலே அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டு அபிவிருத்திக்குழு கூட்டங்களில் அந்த அதிகாரிகளை வஞ்சித்து அந்த அதிகாரிகளை பிழையாக பேசுகின்றனர்.
இந்த அரசியல் வாதிகள் கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் விளங்கி கொள்ள வேண்டும்.
நாங்கள் கொண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாங்கள் முட்டுக் கொடுத்துள்ள கிழக்கு மாகாண சபை என்று அவர்கள் கூறிக் கொள்கின்ற நிலையில் எல்லாமே கைக்குள் வைத்துக் கொண்டு ஏன் மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் ஒப்பாரி வைக்க வேண்டுமென நான் கேட்க விரும்புகின்றேன்
எனவே ஊடகங்களுக்கு என்னை பிழையாக காட்ட வேண்டாம் அதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஊடகவியலாளர்கள் எனது நண்பர்கள். அவர்களுக்கு ஒரு போதும் அவர்களின் நடவடிக்கைக்கு தடையாக இருந்தது கிடையாது. அவ்வாறு இருக்கவும் மாட்டேன. ஊடகவியலாளர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும் போது அதனை நான் எதிர் கொள்ள அவர்களுக்கான குரல் கொடுக்க என்றும் ஆயத்தமாக உள்ளேன் என்றார்.
இதன் போது 59 பயணாளிகளுக்கு எட்டு இலட்கம் ரூபா பெறுமதியான வாழ்வதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.