தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குதர்க்கம் பேசியும், மக்களை ஏமாற்றியும் தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும். இதைவிடுத்து வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஒருபோதும் தேவைப்படாது என்பதுடன், வெளிநாடுகளால் எமது பிரச்சினைகளுக்கு உரியவகையில் தீர்வினைப் பெற்றுத்தர முடியாது.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகள் மீது அமெரிக்க தாக்குதல்களை நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்த போதிலும், பின்வந்த அரசுகள் அமெரிக்காவுடன் கை குலுக்கியதன் பயனாகவே தற்போது தாக்குதல்களுக்குள்ளான குறித்த இருநாடுகளும் அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளன.
அதேபோன்றுதான் நாமும் அரசுடன் ஒரு நல்லுறவை பேணும் பட்சத்திலேயே எமது பகுதிகளையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்ப முடியுமென்பது மட்டுமல்லாது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும்” என்றுள்ளார்.