Breaking
Mon. Dec 23rd, 2024

ஏறாவூர் அபூ பயாஸ்

கிழக்கு மாகாணசபை நேற்று (16) காலை கூடியபோது ,வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான பிரேரணையில் எனக்கும் பேச சந்தர்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த எம்.எஸ்.சுபைர் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில்.

இன்று முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ மாகாணசபை உறுப்பினரான சகோதரர் ஜெமீல் அவர்கள் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பிரேரணையை கொண்டுவந்தமையிட்டு அவருக்கு நன்றி கூறிக்கொள்வதோடு,வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இன்று தேசிய ரீதியாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக பாரக்கப்டுவதை நாம் எல்லோரும் அறிந்ததே.

1990 ஆம் ஆண்டு மிகக் கொடூரமான முறையில் உடுத்த உடையுடன் மாத்திரம் வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் வெளியற்றப்பட்ட அந்த முஸ்லிம் சமூகம் இரு தசாப்தங்களுக்கு மேல் அவர்களடைந்த துன்பங்கள்,துயரங்கள் சொல்லமுடியாதவை.

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டபோது அக்கால தமிழ் தலைவர்கள் கண்ணீர் வடித்ததோடு மாத்திரமல்லாமல் “வடக்கில் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றாதவறை யாழ் மண்ணில் காலடி வைக்க மாட்டேன் என்று கூட தமிழ் தலைமைகள் அறிக்கை விட்டதனை நாங்கள் கண்டிருக்கிறோம்.

இன்றைய நல்லாட்சிக்கான சமாதான சூழ்நிலையில் அந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் சட்டப்படி குடியேற முயற்சிக்கின்ற போது ,சில இனவாத சக்திகள் அதனை தடுத்து அந்த மக்களின் மனங்களை புண்படுத்தும் வேலைதிட்டத்தில் இறங்கியிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இன வாத அமைப்புகளுக்கு சிறந்த பதில்களை முன்னாள்,இந்நாள் அமைச்சர்கள்,புத்திஜீவிகள் உட்பட பலர் “முஸ்லிம்கள் தங்களது சொந்த இடங்களைத் தவிர வேறு எங்கும் ஒரு அங்குல நிலத்தையேனும் எடுத்துக்கொள்ளவில்லை ” என்று மிகவும் ஆணித்தரமாக கூறி இருக்கிறார்கள்.

இந்த முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பலவந்தமாக வெளியேற்றிய விடயம் தமிழ் கூட்டமைப்புக்கு நன்கு தெரிந்த விடயமாக இருப்பதால் அவர்கள் இம்முஸ்லிம்களின் மீள் குடியேற்றதுக்கு சார்பாக குரல் கொடுக்க வேண்டும் என்று இச் சபையிலிருந்து கௌரவமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

முஸ்லிம்களை வடக்கிலிருந்து துரத்திய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்கூட ,ஒரு ஊடகவியாளர் சந்திப்பில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயம் ஒரு துன்பியல் சம்பவம் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆகவே இந்த தமிழ் கூட்டமைப்பினர் முஸ்லிம்களின் மீள் குடியேற்றதுக்கு ஒத்தாசையும்,உதவியும் வழங்க வேண்டும்.

அவ்வாறில்லாமல் அந்த முஸ்லிம் மக்கள் வில்பத்து காட்டை அழித்து குடியேறி இருக்கிறர்கள் என்று நீங்கள் கருதினால் ,ஒரு முஸ்லிம் குடும்பத்தைக்கூட அங்கு உங்களால் காட்ட முடியாது. அவ்வாறான அத்துமீறல்கள் எங்களுக்கு தேவையே இல்லை. நாங்கள் எங்கள் சொந்த வாழ்விடத்தில் வாழவே விரும்புகிறோம்.

அவ்வாறு சந்தேகங்கள் இருந்தால் வில்பத்து,மரிச்சிக்கட்டி ,முசலி போன்ற பகுதிகளுக்கு நேரடியாக எனது சொந்த செலவில் அழைத்துச் சென்று பார்வையிட்டுவர கிழக்கு மாகாணசபை கௌரவ உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இந்த நிலையில் தமிழ் கூட்டமைப்பின் பலமான ஆதரவை நாங்கள் வேண்டி நிற்கின்றோம்..அதோடு இன்றைய அரசும் இம்முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் இரட்டை வேடம் பூணாமல் இணக்கப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் கூறி உரையை முடித்துக்கொண்டார்.

Related Post