-விடிவெள்ளி ARA.Fareel-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பூர் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடற்படை தளபதியுடன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரப்படுவது தவறாகும்.
ஒருவர் தவறு செய்திருந்தாலே மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நடைபெற்ற சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்;
இது தொடர்பாக கட்சி இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இச் சம்பவத்துக்கு முக்கியமளித்து சிலர் இனவாதத்தை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். முதலமைச்சர் மாத்திரமல்ல வேறு எவரென்றாலும் தனது தன்மானத்துக்கும் கௌரவத்துக்கும் சவால்கள் ஏற்பட்டால் உணர்ச்சிவசப்படுவது இயல்பாகும்.
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தால், அவருக்கு மேடையில் கதிரை ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை ஆளுநர் விழா ஏற்பாட்டாளர்கள் மூலம் செய்வித்திருக்க வேண்டும். ஆனால் அவர் மேடைக்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இதனாலேயே முதலமைச்சர் உணர்ச்சி வசப்பட்டு கடற்படை தளபதியைப் பேசியிருக்கிறார். ஜனாதிபதி நாட்டில் இல்லாத வேளை அவரை ஆலோசிக்காது முப்படை முகாம்களுக்கு விஜயம் செய்வது அவருக்கு தடை செய்யப்பட்டிருப்பதும் தவறாகும்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரிக்க உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு பின்னணியை ஆராய்ந்தே தீர்வுகள் பெறப்பட வேண்டும்.
அதை விடுத்து அவரை மன்னிப்பு கேட்கச் சொல்வதும் இராஜினாமா செய்யச் சொல்வதும் ஆரோக்கியமானதல்ல என்றார்.
அதேவேளை நசீர் அஹ்மட் மன்னிப்பு கேட்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் நேற்று வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.