Breaking
Sun. Dec 22nd, 2024

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான அனைத்து நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் தமது முயற்சிக்கு அதிகாரிகளினதும், ஊழியர்களினதும் முழுமையான பங்களிப்பை தாம் எதிர்பார்த்து நிற்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புதுவருட தினத்தை முன்னிட்டு கைத்தொழில் வர்த்தக அமைச்சில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் பங்கேற்ற அமைச்சர் அங்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரீ. எம். கே. பி. தேன்னக்கோன் உட்பட அதிகாரிகள் பலர் உரையாற்றினர். அமைச்சர் ரிஷாட் இங்கு கூறியதாவது,

கைத்தொழில் அமைச்சைப் பொறுப்பேற்ற போது அதன் கீழுள்ள பல நிறுவனங்கள் நட்டத்திலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தன. நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளாலேயே பல நிறுவனங்கள் அந்த நிலையிலிருந்து மீண்டு தற்போது இலாபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இன்னும் சில நிறுவனங்கள் அதிக இலாபத்தை சம்பாதிக்கும் நிறுவனங்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையைக் கொண்டுவருவதற்காக நாம் பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்து வருகின்றன. பிரதி அமைச்சர் சம்பிக ரணவக்கவும் எமக்கு உத்வேகமளித்துவருகிறார். அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சேவையாளர்கள் அர்ப்பணிப்புடன் சேவை செய்துவருவதை நாங்கள் மிகவும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

கடந்த வருடத்தைவிட இந்த வருடம் எமது அமைச்சின் பணிகளுக்கும் திட்டங்களுக்கும் இரட்டிப்பான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. எமது கோரிக்கையை ஏற்று அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் நிதியை ஒதுக்கியிருக்கின்றது. அதற்காக நாம் நன்றி கூறுவதோடு இது எமக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றோம். இந்த நிதி ஒதுக்கீட்டை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும். அதற்காக உங்களின் ஒத்துழைப்பை நாம் கோருகின்றோம். உங்களின் அர்ப்பணிப்பான சேவையின் மூலமே இந்த அமைச்சை வெற்றிகரமாக கொண்டுசெல்ல முடியும். உங்களின் எதிர் காலம் சிறப்பாக அமையட்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

By

Related Post