Breaking
Fri. Nov 22nd, 2024

கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தாமதமாவதால், அதற்கான நட்டஈட்டுத் தொகைச் செலுத்துமாறு, இவ்வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மேற்படி துறைமுக நகரத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இத்திட்டம் தொடர்பில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால், குறித்த சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடமிருந்து 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாகக் கோரியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இல்லாவிடின், கடலில் மண்ணிட்டு நிரப்புவதற்காக தற்போது அனுமதி வழங்கப்பட்ட அளவிலும் கூடிய பிரதேசத்தில் மண்ணிட்டு நிரப்புவதற்கான அனுமதியை, அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், இப்பிரச்சினை தொடர்பான இணக்கப்பாடொன்றுக்கு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமரின் சீன விஜயத்தின்போது, இப்பிரச்சினைக்கான முடிவு எட்டப்படும் என்றும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மேற்படி சீன நிறுவனத்துக்கு, நட்டஈட்டுத் தொகையொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என்று அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post