Breaking
Mon. Dec 23rd, 2024

பிரெஞ்சு நாட்டின் அதிபர்களை அமெரிக்கா வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபருடன் போனில் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அந்த உரையாடலின்போது கடந்த காலத்தில் நட்பு நாடுகளை அமெரிக்கா வேவு பார்த்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை உடனடியாக நிறுத்தப்படும் என அவர் கூறியதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிரெஞ்சு நாட்டின் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹாலண்டே ஆகியோரை அமெரிக்கா வேவு பார்த்ததை விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று அம்பலப்படுத்தியது. இதையடுத்து அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து தெரிவித்த பிரான்சு அதிபர் ஹாலண்டே, அமெரிக்காவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார்.

1995 ஆம் ஆண்டு முதல் 2007 வரை சிராக் அதிபராக இருந்த காலத்திலும், 2007 முதல் 2012 வரை சர்க்கோசி அதிபராக இருந்த காலத்திலும், 2012 முதல் தற்போது வரை அதிபராக உள்ள ஹாலண்டேவையும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் கண்காணித்ததை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் பிரெஞ்சு அரசில் அங்கம் வகித்த பல்வேறு மந்திரிகளையும், அமெரிக்காவுக்கான பிரெஞ்சு நாட்டு தூதரையும் என்.எஸ்.ஏ. கண்காணித்ததாகவும் கூறியிருந்தது.

இதனால், பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மந்திரிகள் மற்றும் ராணுவ தலைவர்கள் கலந்துகொண்ட அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இச்செயலில் ஈடுபட்ட அதிகாரிகளை திரும்ப பெறவேண்டும்’ என்று கூறியது.

அதேநேரத்தில் பிரெஞ்சு நாட்டுக்கான அமெரிக்க தூதரை நேரில் ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பப்பட்டது.

Related Post