யுவதிகளிடத்தில் மாற்றங்கள் வரவேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒன்பது கிராம சேவகர் பிரிவில் தையல் பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்களின் தலைமையில் (4) ம் திகதி வியாழக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நீங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய தேவை இருக்கக் கூடாது நீங்கள் உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே அமைத்துக் கொள்ள வேண்டும் எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகளை நல்ல கல்வியாளர்களாகா மாற்ற வேண்டும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு வாழ வேண்டும் என்கின்ற கனவுகளோடும் கற்பனைகளோடும்தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
உங்களிடம் இருக்கின்ற பிரதானமான சவால்தான் சீரியல் பார்ப்பது அதில் நடிக்கின்ற நடிகைகள் பணத்துக்காக நடிக்கின்றார்கள், அழுகின்றார்கள் அதை பார்த்துக்கொண்டிருக்கின்ற நீங்கள் ஒப்பாரி வைத்து அழுகின்றீர்கள் இதெல்லாம் நம்முடைய நேரத்தை திண்டு கொண்டிருக்கின்ற விடயம்.
அதேபோன்று கையடக்கத் தொலைபேசிப் பாவனை அதிலே அதிகமான முகநூல் பாவனை இப்படி பெண்கள் அதிகமதிகாம் அதிலே செலவு செய்யாமல் பயனுள்ளதாக, வேலைத்திட்டமுள்ளதாக வினைத்திறனுள்ளதாக அமைத்துக் கொள்வதற்கான முனைப்பை நீங்கள் செய்து கொள்ளுங்கள்.
நமது வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதற்கு நமது நேரத்தை களவாடுவதற்கு அல்லது நம்முடைய நல்ல போக்குகளை மாற்றி அமைப்பதற்காகன சவால்கள் இடம்பெறுகின்றது இவ்வாறான சவால்களிலிருந்து நாங்கள் வெளியே வரவேண்டும் எங்களுடைய நேரங்களை பெறுமதியுள்ளதாக, பெறுமானமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதிலே தாய்மார்கள், சகோதரிகள் இதிலே அதிக அக்கறையெடுக்க வேண்டும் என்று இவ்விடத்தில் நான் வினயமாக விண்ணப்பம் செய்கின்றேன்.
நீங்கள் முயற்சியாளர்களாக இருங்கள், ஆகுமான முறையில் ஏதாவது செய்யப்போகின்றோம் என்றால் எங்களிடம் தொடர்பு வையுங்கள் உங்களுக்கு சிறந்த வழிகாட்டல்களையும், அதற்கான ஆலோசனைகளையும் நாங்கள் உங்களுக்கு எந்த நேரத்திலும் தருவதற்கு தயாரா இருக்கின்றோம் என்றார்.