மலேசியப் பிரதமரான நஜீப் ரஷாக் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் எல்லாத் துறையிலும் நீதியைப் பக்க பலமாகக் கொண்டே இருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.
இக்காரணத்தினாலே தான் சமீபத்தில் காஸாவுக்குச் சென்றிருந்த நஜீப் ரஷாக் அங்கு இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிப்பது தவிர பாலஸ்தீனத்தின் PLO மற்றும் ஹமாஸ் ஆகிய பிரிவுகளுக்கு இடையே ஒற்றுமையையும் இணக்கத்தையும் வலியுறுத்தியதையும் முக்கியமாக மேற்கொண்டிருந்தார் என்று கூறப்படுகின்றது. நஜீப் ரஷாக் ஈராக்கிலும் சிரியாவிலும் தமது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் ISIS போராளிகளின் செயற்பாடுகள் இஸ்லாமுக்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். விரிவாக ISIS இன் செயற்பாடுகள் இறைதூதர் முகமது நபியின் வழிகாட்டல்களுக்குப் புறம்பாக இருப்பதாகவும் மனித நேயத்துக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்த நஜீப் இவர்களது வன்முறையைத் தடுக்க சர்வதேச அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் மனிதாபிமானம் அற்ற மோசமான தாக்குதல்களையும் அதனால் அங்கு ஏற்பட்ட பாரிய உயிரிழப்புக்களையும் வன்மையாகக் கண்டித்த ரஷாக் இரு தேசங்களுக்கு இடையேயான யுத்தமானது சில அறநெறிகளுக்கு அமைவாக இடம்பெற வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்தார். புத்ராஜெயாவிலுள்ள சர்வதேச நிலையமான PICC இல் உரையாற்றும் போதே நஜீப் இக்கருத்துக்களைக் கூறியிருந்தார். இதேவேளை காஸாவில் ஹமாஸ் இயக்கத்தின் உத்தியோகபூர்வ அதிதியாக விஜயம் செய்த முதலாவது அரபு நாடு தவிர்ந்த தலைவராக அவரின் விஜயம் அமைந்திருந்தது பாலஸ்தீனம், இஸ்ரேல் மட்டுமன்றி கோலாலம்பூரிலும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.