தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி அவர்களின் நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வங்குரோத்து அரசியல் கலாசாரம் தன்னிட மில்லையென அமைச்சரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது,
நான் என்றுமே மக்கள் பணியாளனாகவே இருந்து வருகின்றேன். அரசியலுக்காக மட்டும் மக்களிடம் வருவதில்லை.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இம் மாவட்டத்தில் 3 ஆசனங்களை நாம் பெற்றுக்கொள்வோம். வன்னி மாவட்டத்தில் அரசியலில் பெரும் மாற்றங்களை நாம் காணப் போகின்றோம். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் எதனை இந்த மக்களுக்கு சாதித்துக் காட்டியுள்ளார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
யுத்த அழிவுகளால் அத்தனையினையும் இழந்த மக்களுக்கு தேவையானது அவர்களது வாழ்வாதாரமாகும், அதற்கு மாற்றமாக தேர்தல் காலங்களில் மட்டும் வீராப்பு பேசுகின்றனர்.
இந்த நிலையில் இருந்து மக்கள் தற்போது விடுபட ஆரம்பித்துவிட்டனர், இன்று எம்முடன் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இணைந்து வருகின்றதை பார்க்கின்ற போது சந்தோஷம் அடைகின்றோம். மக்களுக்கு கிடைக்காத அபிவிருத்தியில் எவ்வித பலனுமில்லை என்பதை எல்லோரும் இன்று அறிந்து கொண்டனர்.
வடக்கிலும், கிழக்கிலும் எமது கட்சி அதிகப்படியான ஆசனங்களை பெற்று ஆட்சியின் முக்கிய பங்காளியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்த மாவட்டத்திற்கு மயில் சின்னம் புதிதாக இருந்தாலும், மக்கள் ஆதரவு அதற்கு பெருகிவருகின்றது. இதனை கண்டு பலர் அச்சமடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறினார்.