தனது நற்பெயரை கெடுப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கிரிக்கெட் சபைச் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் சதி செய்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் செயற்பாட்டுப் பணிப்பாளர் கார்ல்டன் பேர்னாட்ஸுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த வருடம் இடம்பெற்ற சம்பியன் லீக் போட்டித் தொடரின் போது இலங்கையின் கதுரட்ட மெரூன்ஸ் மற்றும் இந்திய ஐ.பி.எல். அணியான சன்றைசஸ் ஐதராபாத் அணிகளில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். அவ்விரு அணிகளும் சம்பியன் லீக் தொடருக்குத் தெரிவு செய்யப்பட்டன. அப்போது நாட்டிற்காகவா? பணத்திற்காகவா? விளையாடுவதென முடிவெடுக்க வேண்டும் என்று நிஷாந்த ரணதுங்க கூறியது செய்யத்தகாத செயலாகும்.
அவர் இந்தக் கருத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பினார். இதனால் நான் பெரும் நெறுக்கடிக்கு உள்ளானேன். அது மட்டுமல்லாது, நிஷாந்த ரணதுங்க பொது இடங்களில் என்னை விமர்சனம் செய்தார். மற்றும் ஊடகங்களில் எனக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தார். இது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை என்னால் மறக்கவே முடியாது. அது மட்டுமல்லாது, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் எனது பெயரை இழிவு படுத்தும் விதத்திலேயே செயற்பட்டார்‡ எனக் குறிப்பிட்டுள்ளார்.