Breaking
Mon. Dec 23rd, 2024
2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று பிற்பகல் 2 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளதோடு, வாசிப்பு மீதான விவாதம் 9 நாட்கள் நடைபெறவுள்ளது.
வரவு – செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை வரவு – செலவுத்திட்டம் மீதான மூன்றாம் கட்ட வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு, ஐந்து நாட்களுக்கு விவாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாசிப்பு மற்றும் வாக்கெடுப்பு டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை விசேட கூட்டம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
புதிய அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்களை உள்ளடக்கி இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், வருமானத்தை உயர்த்துதல், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, 30 இட்லசம் பேருக்கு வீட்டுரிமை போன்ற பல்வேறு பிரதான இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு பிரதமர் கொள்கை விளக்கமளித்தார்.
அதற்கான பொருளாதார கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புகள் இந்த வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்படுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.
வரவு – செலவுத்திட்ட யோசனைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post