நல்லாட்சி அரசு இன்று அல்லது நாளை கவிழ்ந்து விடும் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். 2025 ம் ஆண்டு வரைக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கப்போகிறது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவுமே பதவி வகிக்க போகிறார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம் நவவி தெரிவித்தார்.
புத்தளம் மன்னார் வீதி புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் பொது மக்களுக்கு துரித கெதியில் சேவைகளை வழங்கும் பொருட்டு 22 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மக்கள் சேவை இல்லத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் எம்.என்.எம். ரஸ்மி தலைமையில் வியாழக்கிழமை (12) காலை நடைபெற்ற இந்நிகழ்வில் ஐ.தே. கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி, புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் வன்னிநாயக, புத்தளம் பதில் பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர, புத்தளம் மாவட்ட ஜம்இயத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், தில்லையடி முருகன் ஆலயத்தின் பிரதம குரு வெங்கட சுந்தராம குருக்கள் உள்ளிட்ட கிராம சேவையாளர் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அபிவிருத்தியிலே 20 வருடங்கள் பின்தங்கியுள்ள நாம் இந்த நல்லாட்சி அரசின் மூலமாக பல்வேறு அவிருத்திகளின்பால் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். சுகாதார, கல்வி மற்றும் பாதை அபிவிருத்திகள் நமது நகரில் அசுர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தளம் நகரின் வடிகான் தீர்வுக்காக 290 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தொடர்பான திட்டத்தினை பிரதமரிடம் நாம் சமர்ப்பித்துள்ளோம்.
நாம் தூங்கிக்கொண்டிருக்கின்றோம்
எதிர்நோக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புத்தளம் நகர சபையை ஐ.தே. கட்சியின் நிர்வாகத்துக்கு வழங்குவதன் மூலம் நமது நகரம் மேலும் முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லப்படும் எனக்கூறினார்