Breaking
Mon. Nov 18th, 2024

சிறுபான்மையினரைப் பாதிக்கின்ற எந்த விடயத்திற்கும் நல்லாட்சி அரசு பாரிய விலை கொடுக்க வேண்டி வரும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி அல் இக்பால் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் நூலகக் கட்டடத் திறப்பு விழா நேற்று (30) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வித்தியாலய அதிபர் ஏ.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஷ்ரப், ஓட்டமாவடி மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஜுனைட், கோறளைப்பற்று மத்தி இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.றம்ஸி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில்!

எதிர்காலத்தில் அரசியல் மாற்றங்கள், அரசியலமைப்பு மாற்றங்கள் எனப் பேசப்பட்டு வருகின்றது.

சிறுபான்மை இனத்தை பாதிக்கின்ற எந்த அரசியல் மாற்றமாகவும், திட்டமாகவும் இருத்தாலும் தமது கட்சி மாத்திரமன்றி ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் இந்த நாட்டில் எதிராக இருகின்றனர்.

இந்த நாட்டில் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசுகின்ற சமூகத்திற்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டுமென்று எடுத்துக் கொள்கின்ற முயற்சியில் மீண்டும் சிறுபான்மைச் சமூகத்தின் குரல் வளைகளை நசுக்குகின்ற திட்டமாக அரசியலமைப்பு மாற்றம் இருக்கும் பட்சத்தில், இந்த பிரதேசத்திலிருக்கின்ற தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மாத்திரமல்லாமல் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் சிறு கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு, அதற்கெதிராக போர்க்கொடி தூக்குவதற்கு தயாராக இருகின்றன.

சிறுபான்மைப் சமூகத்தைப் பாதிக்கின்ற எந்த விடயத்திற்கும் பாரிய விலை கொடுக்க வேண்டிய நிலைமை பெரும்பான்மைக் கட்சிகளின் இரு தலைவர்களுக்கும் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்

By

Related Post