-ஊடகப்பிரிவு-
நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளதையே அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திய இனவாதிகளை பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய நிகழ்வு உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் உள்ள பெரும்பான்மையினர் அரசியல்வாதிகளின் ஆசியுடனும், பொலிஸாரின் வழி நடாத்தலுடனும் இந்தப் பிணை வழங்கும் சம்பவத்தை நன்கு சோடித்து, மிகவும் நேர்த்தியாக அரங்கேற்றியுள்ளனர்.
பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான இந்த நாசகாரச் செயலை இனவாத சம்பவம் கிடையாது எனவும், இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை எனவும் பொலிஸார் நாக்கூசாமல் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தைப் பேண வேண்டியவர்கள், மக்களைப் பாதுகாப்பவர்கள் இவ்வாறு கேவலமாக நடந்துகொண்டிருப்பது, நல்லாட்சி அரசின் ஓட்டைகளையே வெளிப்படுத்தியுள்ளது.
மனுதாரரின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தும், நல்லாட்சி அரசின் காவலர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது சட்டத்தை மதிப்பவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இனவாதிகளின் மிரட்டல்களுக்கும், பௌத்த மதகுருமார்களின் அச்சுறுத்தல்களுக்கும் நல்லாட்சி அரசு பயந்து, பொலிஸாரின் ஊடாக இவ்வாறான கைங்கரியத்தை செய்திருப்பது, அவர்களை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவந்த சிறுபான்மை மக்களுக்கு கன்னத்தில் அறைவது போன்று இருக்கின்றது.
வெளிப்படையாகவும், தெளிவாகவும் தெரிந்த ஓர் இனவாத அட்டகாசத்தை மறைத்து, நீதிமன்றத்தை பிழையாக பொலிஸார் வழிநடாத்தி இருப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த காலங்களிலும் இனவாத பௌத்த தேரர்களின் வெளிப்படையான அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும் மறைத்து பொலிஸார் பிணை வழங்கி இருக்கின்றனர். இப்போது, இனவாத மதகுருமார்களே நல்லாட்சியை வழிநடாத்துவது வெளிப்படையாக வெட்டவெளிச்சமாகி உள்ளது.
அரசாங்கம், முஸ்லிம்கள் மீதான இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களை கண்டும்காணாதது போல் இருந்தால், அதன் விளைவுகளை அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அம்பாறை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில், சற்றுமுன்னர் கொழும்பு வந்தடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்ட போது, இதுதொடர்பில் உடனடியாக தன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு பிரதமர், அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில நிமிடங்களில் பிரதமருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.