மக்களது உள்ளங்களில் இன்றைய சூழ்நிலையில் சந்தேகங்களும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ள நிலையில் சமூகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் பொறுப்பு என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார் .
நிந்தவூர் பிரதேச சபையின் 14 ஆவது அமர்வின் போது(வியாழக்கிழமை-30) அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் மற்றும் புத்தி ஜீவிகளுக்கும் எதிராக சில ஊடகங்கள் மேற்கொண்டுவரும் சதித்திட்டங்களைக் கண்டித்துப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்
ஆனால் இப்போது முஸ்லிம் பெயர்தாங்கிய ஒரு சில நாசகாரர்களின் செயலை வைத்து முழு முஸ்லிம் சமூகத்தையும் அல்லது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பதோடு இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக இன மத வேதங்கள் இல்லாமல் இரவு பகலாக பாடுபடும் எங்கள் அரசியல் தலைவர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற துடிக்கும் பேரின சக்திகள் மற்றும் இனவாத ஊடகங்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றை வன்மையாக கண்டிக்க வேண்டும். பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்கள் மீது வெறுப்படையக் கூடியவாறு சாதாரண சம்பவங்களை கூட ஊதிப் பெருப்பித்து பூதாகரமாக்குவதை ஊடகங்களில் பணிபுரிவோர் தவிர்த்து கொள்ள வேண்டும்.
அத்துடன் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாத முஸ்லிம்கள் சிலர் மேற்கொண்ட கீழ்த்தரமானதும் மிலேச்சத்தனமானதுமான படுகொலைகளின் விளைவாக பெரும்பாலான முஸ்லிம்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து அவதிப்படுகின்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் தாம் இத்தகைய ஆபத்தில் சிக்கிக் கொள்வதற்கு வழிகோலிய ஏதுக்கள் பற்றி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. சில ஊடகங்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மிகவும் பாரதூரமான செயற்பாடுகள் எமது சமூகத்தைப் பொறுத்தவரை மிகவும் சிக்கலான காரியமாக உள்ளது.
அரசியல் ரீதியாக நெறிப்படுத்தப்படும் ஊடக நிறுவனங்கள் ஒரு சமூகத்தவரை மற்றொரு சமூகத்தவர் மீது ஆத்திரமூட்டச் செய்வதன் மூலம் மோதலை வளர்ப்பதல்லாது அரசாங்கத்தையும் ஆளும் தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளையும் அவமானத்திற்கு உள்ளாக்குவதாக உள்ளது. சில பிரதான ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதான பீதி மனப்பான்மையை நயவஞ்சகத்தன்மையோடு கையாண்டு சட்டம் தனது கடமையை நிறைவேற்றுவதற்கு முன்னரே தாமாக தீர்ப்பை வழங்கிவிடுகின்றனர்.
அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட சக்திகள் மூலம் மக்களை தூண்டுகின்ற செயற்பாடுகளை ஊடகங்கள் கைவிட்டு நல்லிணக்கத்திற்கான பாரிய பொறுப்பை சுமந்து பாடுபட முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அத்தோடு இச்சந்தர்பத்தில் பொறுப்புள்ள ஊடகங்கள் நியாயமாகவும் நிதானமாகவும் இப்போதுள்ள பிரச்சனைகளைக் நிதானமாக கையாளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.