இனி வரும் காலங்களில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எற்படா வண்ணம் அனைத்து தரப்பும் நடந்து கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இன நல்லிணக்கம் தொடர்பான விஷேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இன ரீதியான முரண்பாட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு சுமூகமான நிலைமையை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லிணக்கம் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (21.12.2016) புதன்கிழமை நடைபெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.
இக் கூட்டத்தில் நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக்ச மற்றும் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா உட்பட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார் ள்ஸ் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறீதரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இன ரீதியான முரண்பாட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இனி வரும் காலங்களில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான சம்பவங்கள் எற்படா வண்ணம் அனைத்து தரப்பும் நடந்து கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டதாக பிரதியமைச்சர் அமீர் அலி மேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே எந்த விதமான பிரச்சினைகளும் சர்ச்சைகளும் மத ரீதியாக மதத் தலைவர்களால் ஏற்படுத்தப்பபடக் கூடாது என்ற விடயத்திலே நாங்கள் எல்லோரும் உறுதியாக இருந்தோம்.
அந்த வகையில் எதிர்காலத்திலே இந்த மாவட்டத்தில் எந்த விதமான இன
ரீதியான முரண்பாடுகள் வந்து விடக்கூடாது. அதற்கு யாரும் துணை நிற்க கூடாது எனவும் இவ்வாறான முறன்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றினை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பிரதியமைச்சர் அமீர் அலி மேலும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் விஷேட பணிப்புரையின் பேரில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மற்றும் ஞானசார தேரர் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடினேன்.
நாட்டில் சுமூக நிலையை ஏற்படுத்துவதற்கு அவர்கள் தடையாக இருக்க மட்டோம் என கூறியுள்ளனர்.நாட்டில் இன முரன்பாடு ஏற்படாத வண்ணம் அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும்.இன நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். நமது நாடு ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த இலக்கை அடைவதற்கு அனைவரும் உதவியாக செயற்பட வேண்டும்.
இன முறன்பாடுகள் இன விரிசல்கள் ஏற்படும் போது அவற்றினை பேசி தீர்ப்பதற்காகவும சுமூகமான நிலையை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதியினால் இன நல்லிணக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் நான் மற்றும் அமைச்சர்களான சுவாமிநாதன், மற்றும் ஏ.எச்.எம்.ஹலீம், மனோகணேசன், ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்; அலி உள்ளிட்ட பலர்இருக்கின்றனர்.
எனவே இன ரீதியான முரன்பாடுகள் ஏற்படும் போது அவற்றினை உடனடியாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் ஏற்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார்.