1945 ஆம் ஆண்டில் 2 ஆம் உலகப் போரில் ஜேர்மனி தோல்வியுற்றதை அடுத்து 4 துண்டுகளானது. இதில் மூன்றை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை கட்டுப் படுத்தியதுடன் இவை அனைத்தும் இணைந்து பின்னர் மேற்கு ஜேர்மனி ஆனது. இந்த நாடுகளுக்கு நட்புடன் திகழாத சோவியத் யூனியன் 4 ஆவது பாகத்தை கட்டுப் படுத்தியதுடன் அப்பாகம் பின்னர் கிழக்கு ஜேர்மனி ஆனது.
மேலும் இவை தமக்கிடையே பிரிக்கப் பட்ட பகுதிகளை ஆள்வதற்காக தலைநகர் பேர்லினில் மிகப் பெரிய சுவர் கட்டப் பட்டு மேற்கு ஜேர்மனியுடன் மேற்கு பேர்லினும் கிழக்கு ஜேர்மனியுடன் கிழக்கு பேர்லினும் இணைந்தன. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை சகோதரர் சகோதரிகள் கூட ஒருவரை ஒருவர் காண முடியாதவாறு பலவந்தமாகப் பிரிக்கப் பட்டனர். 1961 ஆகஸ்ட் 13 இல் கட்டப் பட்ட பேர்லின் சுவர் 28 வருடங்களாக ஜேர்மனியைப் பிரித்து வைத்திருந்தது. எனினும் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையேயான பனிப்போரின் குழப்பத்தின் உச்சக் கட்டத்தில் 1989 நவம்பர் 9 இல் கிழக்கு ஜேர்மனியைக் கட்டுப் படுத்தி வந்த சோவியத் யூனியன் அதன் மக்களை மேற்கிற்குள் செல்வதற்கு அனுமதிப்பதாக அறிவித்ததை அடுத்து பல நூற்றுக் கணக்கானவர்கள் சுவரில் ஏறி மேற்கிற்குள் நுழைந்தனர். இவர்களைப் பல்லாயிரக் கணக்கான மேற்கு ஜேர்மனியினர் மறு பக்கத்தில் இருந்து வரவேற்றனர். எனினும் மேற்கு ஜேர்மனிக்குள் தப்ப முயன்ற 125 பேர் பலியானதாகவும் கூறப்படுகின்றது.
அடுத்த சில கிழமைகளில் பேர்லின் சுவர் முற்றாக இடிக்கப் பட்டது. இதன் வீழ்ச்சி ஜேர்மனி ஒன்றிணைவதற்கு அடிப்படையாக அமைந்ததுடன் 1990 அக்டோபர் 3 இல் இவை இணைந்து ஜேர்மனி ஒரே இராச்சியமானது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை பேர்லின் சுவரின் வீழ்ச்சியை ஜேர்மனியர்கள் கொண்டாடவுள்ள நிலையில் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டின் இச்சம்பவத்தில் இருந்து சர்வதேசம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.