பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷரீப் விலகும் வரை, நேற்று புதன் கிழமை அரசுடன் தான் தொடங்கியிருந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து தான் விலகிக்கொள்வதாக எதிர்க்கட்சிப் பிரமுகர் இம்ரான் கான் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த தனது ஆதரவாளர்களிடையே பேசிய இம்ரான்கான்,நவாஸ் ஷரீப் பதவி விலகும் வரை தான் தனது போராட்டத்தை விடப்போவதில்லை என்று கூறினார்.
பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற அவரது கோரிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது.
இம்ரான் கானும், தாஹிர் அல் காத்ரி என்ற மற்றுமொரு எதிர்க்கட்சி மதகுருவும், தனித்தனியாக அரசுக்கெதிரான மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு அவர்கள் கூறியதைப் போல பெரிய அளவு ஆதரவு கிடைக்கவில்லை.