ராணுவ பலத்தை அதிகரிப்பதை விட்டு, இந்தியாவுடன் அமைதியான உறவை மேற்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயன்று வருவதை அவரது சமீபத்திய நடவடிக்கைகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில், அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு வருகை தர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலின்படி, அக்டோபர் மாத இறுதியில் இந்த சந்திப்பு நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம்.
மேலும், வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா. சபையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் 2-வது முறையாக அமெரிக்காவுக்கு செல்கிறார்.