Breaking
Fri. Dec 27th, 2024

இலங்கையர்கள் உட்பட நவ்ரூ தீவில் தங்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

புகலிடம் கோரி, சட்டவிரோத படகு பயணங்கள் மேற்கொண்டு வருகின்றவர்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம், ஏற்கனவே தமது நாட்டை வந்தடைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பீ.பீ.சீ. உலக சேவை தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவின் இந்த முடிவானது உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புகலிடம் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகளை எடுக்கும்வரை அவர்களை நவ்ரூ தீவிலுள்ள முகாம்களில் அவுஸ்திரேலியா தடுத்துவைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் விரும்பினால் கம்போடியாவில் அவர்களை குடியேற்றுவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் முனைப்பு காட்டுவதாக பீ.பீ.சீ. உலக சேவை தெரிவித்துள்ளது.

ஆயினும், இந்த நடவடிக்கைகக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதுடன், இதுவொரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பின் பேச்சாளர் இயன் ரிண்டௌல் கூறியுள்ளார்.

கம்போடியாவின் உள்நாட்டு பிரஜைகளுக்கே கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சிரமப்படும் அரசாங்கம், புகலிடம் கோரிக்கையாளர்களின் நலன்களை எவ்வாறு முன்னெடுக்க முடியும் எனவும், அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும், நவ்ரூ அரசாங்கத்திற்கும் இடையே மீள்குடியேற்றம் தொடர்பில் எந்தவொரு உடன்படிக்கையும் காணப்படவில்லை என்பதுடன், புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது நாட்டில் தற்காலிகமாக தங்குவதனை மாத்திரமே நவ்ரூ அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் இயன் ரிண்டௌல் குறிப்பிட்டுள்ளதாக பீ.பீ.சீ. செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனவே புகலிடக் கோரிக்கையாளர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நிலவுகின்ற இடைவெளியை நிரப்பும் நோக்கிலேயே அவர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பை மேற்கோள்காட்டி பீ.பீ.சீ. மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
-BBC-

Related Post