2010ஆம் ஆண்டிற்குப் பின்னர், தற்போதைய ஜனாதிபதியின் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
சிலாபம் மஹாவௌ பிரதேசத்தில் 12-12-2014 இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2005ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
அந்த காலகட்டத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறப்பு வாய்ந்தவராக திகழ்ந்தார்.
நாங்கள் அந்த காலகட்டத்தில் அவரை, மகிந்த அண்ணா என அழைத்தோம். அவ்வாறான ஒருவர் 2010ஆம் ஆண்டின் பின்னர் நாங்கள் எதிர்பார்த்த பயணத்தைவிட மாறான பாதையில் பயணித்தார்.
அவரை தெரிவு செய்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை மறந்து செயல்பட்டார்.
இதில் முதலாவது விடயம் என்னவென்றால், இன்று அரசாங்கத்தில் எஞ்சியிருக்கும் அமைச்சர்கள் எந்தவிடயத்தை கூறினாலும், அதனை அவர் செவிமடுப்பதில்லை.
கட்சித் தலைவர்களின் எந்தவிதமான ஆலோசனைகளையும் அவர் பெறுவதில்லை என பொது வேட்பாளர் தெரிவித்துள்ளார்
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனரத்ன, என்றும் இணைய முடியாதிருந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்டார்.