-ஊடகப்பிரிவு-
நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதாயின் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பாராளுமன்றில் தெரிவித்தார்.
1970களில் இலங்கையைப் பார்த்து சிங்கப்பூர் முன்னேற ஆசைப்பட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி சிங்கப்பூரை போன்று முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பங்களாதேஷ் போன்ற நாடுகள் முன்னேறுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன. சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானத்தை ஈட்டும் நாடாக இலங்கை இருக்கின்ற போதும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சில குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இனவாத ரீதியான பிரசாரங்களால் ஏற்பட்ட முரண்பாடு சுற்றுவாத்துறையையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் எந்த இனத்தவர்களாக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் இனப் பிரிவுகளை விடை ஒரே நாட்டவர் என்ற அடையாளத்துடனே செயற்படுகின்றனர்.
முப்பது வருட யுத்தத்தின் பின்னர் இனரீதியான அடையாளங்களுக்கு முன்னிலை வழங்குவதாலே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள சகல உறுப்பினர்களும் இன, மத, கட்சி பேதமின்றி தாய்நாட்டை நேசிப்பவர்களாக செயற்படவேண்டும். அப்படி செயற்படாவிட்டால் இலங்கை நாணயத்தின் பெறுமதி மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது.
இவ்வாறான நிலையில் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த எதிர்க்;கட்சியினர் உள்ளிட்ட சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். எமது நாடு இதே பாதையில் சென்றால் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்பதை ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர் என்ற ரீதியில் கவலையுடன் கூறிக்கொள்கின்றேன்.