நாட்டில் சுகாதார சேவையை முழுமையாக வழங்குவதற்கு; இன்னும் மூவாயிரம் வைத்தியர்கள் தேவைப்படுகின்றார்கள். ஆயினும் ஒரு வருடத்தில் ஆயிரம் வைத்தியர்கள்தான் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறுகின்றனர். அவர்களுள் 250இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். இப்பிரச்சினை இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர்தான் தீர்க்கப்படும் என சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்தார்.
மத்தியமுகாம் வைத்தியசாலைக்கு அண்மையில் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட சுகாதார பிரதி அமைச்சர் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்: நாட்டிலுள்ள வைத்தியசாலைகளை வேறுபடுத்திப் பார்க்காது எல்லா வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கேட்டுள்ளார்.
அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். ஆதலால், மத்திய முகாம் வைத்தியசாலையும் அபிவிருத்தி செய்யப்படும்.
அபிவிருத்திகளை மேற்கொள்ளும் போது திட்டமிட்டு நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைக்கக் கூடியவகையில் செய்யப்பட வேண்டும். ஆதலால், இந்த வைத்தியசாலையில் காணப்படும் கட்டிடக் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கட்டிடத் திணைக்களத்தின் தொழில் நுட்ப உதவியைப் பெற்று இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வோம். மேலும், முதற்கட்டமாக இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றினையும், மகப்பேற்று விடுதி ஒன்றினையும், மின்பிறப்பாக்கி ஒன்றினையும் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்வேன்.
இந்த வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர்தான் தீர்த்து வைக்க வேண்டும். நாட்டில் சுகாதார சேவையை முழுமையாக வழங்குவதற்கு இன்னும் மூவாயிரம் வைத்தியர்கள் தேவைப்படுகின்றார்கள்.
ஆயினும் ஒரு வருடத்தில் ஆயிரம் வைத்தியர்கள்தான் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறுகின்றனர். இதிலும் 250இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுகின்றார்கள். பொதுவாக கிழக்கு மாகாணத்தில்தான் அதிகமான வைத்தியர்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றார்கள். இப்பிரச்சினை இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர்தான் தீர்க்கப்படும் என்றார்.