நாட்டுக்கு தேவை அரசனல்ல, நல்லாட்சி செய்யும் உண்மையான மனிதனே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், ஆசிகளையும் பெற்று கொண்டார்.
இதன் பின்னர் கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் எண்கோண மண்டபத்திலிருந்து நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளதாவது, “ஒரு நாட்டுக்கு தேவை அரசனல்ல. உண்மையாக ஆட்சிபுரியும் நல்ல மனிதனே. இந்நிலையில் இந் நாட்டின் சேவகனாக தெரிவு செய்ய ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வாக்களித்த சகல மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இந்த தேர்தல் வெற்றி உங்களுடையது. எனவே யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும்.
நாட்டில் மனித நேயம், நீதி ஆகியவற்றை நிலைநாட்ட கூடிய நல்லாட்சியை ஏற்படுத்துவேன். நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்ல பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் எமது தேசிய அராங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி நாட்டின் ஆட்சியை முன்னெடுக்க வேண்டும். இதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதேவேளை அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், வறுமை நிலையை போக்கவும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் அபிவிருத்தி ஏற்படவும் முதல் கட்ட நடவடிக்கையை எடுப்பேன்.” என்றுள்ளார்.