Breaking
Mon. Dec 23rd, 2024

– M.S.M.ஸாகிர் – 

நாம் இருக்கின்ற இடங்களிலிருந்து கொண்டு எம் சமுதாய நலனுக்கும், ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து வாழும் ஒற்றுமைக்கும், நாட்டு நலனுக்காகவும் எவ்வாறு செயற்படலாம் என்பது தொடர்பாக ஒத்த கருத்தோடு பயணிக்க நாம் அனைவரும் ஒன்று படவேண்டுமென சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளர் மர்ஹும் எச்.எம்.பாயிஸின் நினைவேந்தல் நிகழ்வும் பாத்திமா இஸ்ரா எழுதிய “ஹொந்தம மித்துர” சிங்கள நூல் வெளியீட்டிலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு ஜம்மியத்துஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(20) நடைபெற்றது. இதன்போது அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், அலி ஸாஹிர் மௌலானா, அஷு மாரசிங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்.
மர்ஹும் பாயிஸின் பிள்ளைகளது கல்வி மேம்பாட்டுக்காக அல் – கபாலா நிறுவனம், அஷ்ஷபாப் நிறுவனம், மர்ஹும் ஆதில் பாக்கிர் மாக்கார் சார்பாக அவரது குடும்பத்தினர் மற்றும் கோல் கேட்டர்ஸ் உரிமையாளர் எம்.எம். சப்ரி ஆகியோரால் புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் பேசிய அமைச்சர் கூறியதாவது,
ஊடகவியலாளர்களும், கலைஞர்களும் எமது சமுதாயத்தைப் பொறுத்தவரையில் நிறைய ஆற்றல்கள் இருந்தாலும் அந்த ஆற்றல்களை நூறு வீதம் விரும்பிய முறையில் சரியான முறையில் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இடைஞ்சல்களையும் தடைகளையும் தொடர்ந்தேர்ச்சியாக தந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.

அரச ஊடகங்கள் மாத்திரம் இருந்த ஒரு யுகம் இருந்தது. அந்தக் காலங்களிலே அரசியல் கட்சி அல்லது ஆட்சியில் இருக்கின்றவர்களுக்கு எதிராகப் பேசமுடியாத நிலை இருந்தாலும் சமுதாயம் சார்ந்த விடயங்கள் அல்லது சமுதாயத்திற்கு எதிராக அபாண்டமாகப் பேசப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்து வந்திருக்கின்றது.

இன்று தனியார் ஊடகங்களுடைய ஆதிக்கம் நிலை கொண்டிருப்பதனாலும் மக்கள் அதிகமாக தனியார் ஊடகங்களைப் பார்த்து ரசிப்பதனாலும் அதிலே தங்கியிருப்பதனாலும் அதனால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்களை அண்மைக்காலமாக நாங்கள் பார்த்து வருகின்றோம்.

சகோதரர் பாயிஸ் இளம்வயதிலே எங்களை விட்டுச் சென்று விட்டார். அது எமக்கு கவலையைத் தந்திருக்கின்றது. அவர் விட்டுச் சென்ற இந்தப் பிள்ளைச் செல்வங்களைப் பார்க்கும் போது நாம் எல்லோரும் அந்தப் பிள்ளைகளுக்காகவும் அவருக்காகவும் துஆச் செய்கிறோம். இதேபோல நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் ஊடகத்துக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, பல எதிர் பார்ப்புகளோடு வாழ்ந்து மரணித்த எத்தனையோ ஊடகவியலாளர்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் பல கஷ்டங்களை இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அரசியல்வாதிகள், தனவந்தர்கள் அதேபோல் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து சமுதாய நலன்களுடைய விடயங்களிலே ஒத்த கருத்தோடு, கட்டமைப்போடு செயல்படவேண்டிய தேவைப்பாடு இந்த சமுதாயத்திற்கு வந்திருக்கின்றது.

அந்த வகையிலே நம் நாட்டிலே அதிகமாகப் பேசப்படுகின்ற மொழி சிங்களம். சுதந்திரத்திற்கு முன்னைய காலத்திலிருந்தே இஸ்லாமிய சமூகம் பெரும்பான்மை சிங்கள சமுதாயத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்த வரலாறும் ஒத்த கருத்தோடு இந்த நாடு பிளவுபட்டுவிடக் கூடாது என்று எங்களுடைய முன்னாள் தலைவர்களெல்லாம் ஏனைய தலைவர்களோடு சேர்ந்து போராடியது போல சுதந்திரத்திற்கு பிறகு இருந்து மரணித்த பல தலைவர்களும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக, ஒற்றுமைக்காக நாட்டின் நலனுக்காக உழைத்திருக்கிறார்களே ஒழிய, ஒரு போதும் இந்த நாட்டைப் பிளவுபடுத்தி, இந்த நாட்டின் பொருளாதார அழிவுக்கு, இட்டுச் செல்லுகின்ற எந்த ஒரு நடவடிக்கைக்கும் எங்கள் அரசியல், சமூகத் தலைவர்கள் ஒரு போதும் ஈடுபட்ட வரலாறு கிடையாது.

எனவே இன்று ஊடகத்தின் வெற்றிடமும் இந்த தனியார் ஊடகங்களினுடைய தாக்கமும் ஒற்றுமையாக இருந்து வருகின்ற இந்த சமுதாயம் பிரிந்து விடுமோ பிளவு ஏற்பட்டு விடுமோ இதன் மூலம் சிறுபான்மையாக பரந்து வாழுகின்ற நமக்கு எதிர்காலத்திலே ஆபத்து வந்துவிடுமோ என்ற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல பொதுவாக அதிகமானவர்கள் இந்த சிந்தனையோடு இருந்து வருவதை நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே ஏற்கனவே நான் சொன்னதைப் போல ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழவும் புத்தி சாதூர்யமான ஒரு சமூகமாகவும் கல்வியின் உச்சத்தை அடைகின்ற சமூகமாகவும், இறைவன் தந்திருக்கின்ற வளத்தை சமுதாயத்திற்காக தனவந்தர்கள் பயன்படுத்திக் கொள்கின்ற போன்றுதான் சமுதாயத்தில் நல்லதொரு மாற்றத்தை நாம் காணலாம். எனவே அதற்காக வேண்டி உழைக்க வேண்டிய பொறுப்பும் பிரார்த்திக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கின்றது.

சகோதரர் முஜிபுர்ரஹ்மான், அலி சாஹிர் மௌலானா கூறியது போன்று, அந்த ஆட்சி சரியில்லை என்று இந்த ஆட்சியைக் கொண்டு வந்தாலும் ஆட்சியாளர்களுடைய கதிரைகள் அதே கதிரைகளாக அந்தக் கதிரைகளில் உள்ளவர்கள் மாறி இருந்தாலும் கொள்கைளும் கோட்பாடுகளும் செயல்பாடுகளும் பெரிய மாற்றத்தை காணவில்லை ன்-ப-துதான் மனவேதனை அளிக்கக் கூடிய விடயம் என்பதை அவர்-க-ளும் சுட்-டிக்-காட்-டி-னார்-கள்.

எனவே அந்த வகையிலே நாங்கள் அந்த ஆசனங்களிலே அமர முடியாதவர்கள். இவ்வாறுதான் இந்த நாட்டின் வரலாறு அமைந்திருக்கின்றது. என்றாலும் இருக்கின்ற இடங்களிலே நாங்கள் இருந்து கொண்டு எங்களுடைய சமுதாயத்தினது நலனுக்காகவும் ஏனைய சமுதாயத்தினோடு சேர்ந்து வாழுகின்ற ஒற்றுமைக்காகவும் நாட்டு நலனுக்காகவும் எவ்வாறு செயற்படலாம் என்பது சம்பந்தமாக ஒத்த கருத்தோடு பயணிக்க நாங்கள் அனைவரும் ஒன்று படவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றேன்.

முஸ்லிம் மீடியா போரம் எடுக்கின்ற இப்படியான நல்ல நடவடிக்கைகளுக்கு நாட்டின் தனவந்தர்கள் வளமுள்ளவர்கள் நிச்சயமாக கைகொடுத்து உதவமுன் வரவேண்டும்
சிங்கள மொழியில் ஆற்றல் உள்ளவர்கள் எங்களைப் பொறுத்தவரையில் நிறைய உலமாக்கள், ஊடகவியலாளர்கள், பேச்சாளர்கள் கிடையாது. அண்மைக்காலச் சம்பவங்களைப் பார்க்கின்ற போது அத்தியாவசியமான மொழியாக சிங்களம் இருக்கின்றது. எனவே அதற்காக ஒரு தூரநோக்கோடு செயல்பட வேண்டிய தேவைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.

“ஹொந்தம மித்துர” என்ற சிறுவர் கதைகள் அடங்கிய இந்நுõலை மாணவி இஸ்ரா சிங்களத்தில் எழுதி இருக்கின்றார். அவருடைய இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அதற்காக வெளியிடுவதற்கு உதவி செய்த துசல் விதானகேயை அழைத்து கௌரவப்படுத்துவது பாராட்டக் கூடிய விடயம். எனவே அவராக முன்வந்து இந்த மாணவிக்கு உதவி செய்தததையிட்டு நாங்கள் பாராட்டுகின்றோம்- என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான அலி ஸாஹிர் மௌலானா, பேராசிரியர் அஷு மாரசிங்க, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் சாதிக் சிஹான் ஆகியோரும் உரையாற்றினர். கலைவாதி கலீல், பாயிஸ் நினைவுக் கவிதையை பாடினார்.

2 3 4

By

Related Post