எம்.ஆர்.சாரா
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தது மட்டுமன்றி மக்கள் மனங்களிலிருந்த அச்சத்தைப் போக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் கெண்டுசெல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கெலிஓயா நகரில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய சந்தர்ப்பத்தில் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்புக் கிடைத்தது. இப்பங்கரவாதத்தினால் சகல இன மக்களும் துன்பப்பட்டனர். முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை மட்டுமன்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் யுத்தம் முடிவடைந்தவுடன் அபிவிருத்தி வேலைகள் சகல பிரதேசங்கிலும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. பாதைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. கண்டியிலிருந்து கொழும்புக்கு நாற்பத்தைந்து நிமிடங்களில் செல்லக்கூடிய வாய்ப்பு மிக விரைவில் கிடைக்கும். சுற்றுலாத்துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதனை நோக்கமாகக்கொண்டு வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.