Breaking
Fri. Nov 15th, 2024
நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்கள் முற்றாக நிராகரித்திருப்பதாகவும் உண்மையான ஜனநாயகம் பிரதிபலிக்கக் கூடியதான அரசியலமைப்பின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தியிருப்பதாகவும் அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க நேற்று புதன்கிழமை விசும்பாயவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
தற்போதுள்ள கட்சித்தாவல் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமெனவும், தேர்தலில் தோல்வி கண்டவர்கள் மாற்று வழிமூலம் பாராளுமன்றம் கொண்டுவரப்படுவது தடுக்கப்பட வேண்டுமெனவும் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்தறியும் அமர்வுகளில் மேற்கண்ட மூன்று விடயங்களுமே மேலோங்கிக் காணப்பட்டதாகவும் லால் விஜேநாயக்க கூறினார்.
மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், சபாநாயகரும் அரசியலமைப்புச் சபையின் தலைவருமான கருஜயசூரியவிடமும் கையளிக்கப்பட்டதன் பின்னர் லால் விஜேநாயக்க தலைமையிலான மக்கள் கருத்தறியும் குழு நேற்றுப் பிற்பகல் விசும்பாயவில் ஊடகச் சந்திப்பை நடத்தியது. அங்கு தொடர்ந்து விளக்கமளித்த லால் விஜேநாயக்க கூறியதாவது,
புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்கும் பொருட்டு 2015 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவுக்கு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன். என்னுடன் 20 பேர் உள்வாங்கப்பட்டனர். இதில் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் பலரும் உள்ளடக்கப்பட்டதோடு அரசியல்வாதி ஒருவரும் நியமிக்கப்பட்டார். எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை 2016 ஜனவரி 4 ஆம் திகதியன்று ஆரம்பித்தோம். நாம் இதற்காக 20 விடயங்களைக் கொண்ட வினாக்கொத்தொன்றை தயாரித்து அதனடிப்படையில் மக்களின் கருத்தை அறிய நடவடிக்கை மேற்கொண்டோம்.
முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் எட்டு நாட்களை ஒதுக்கி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அடுத்த கட்டமாக ஏனைய மாவட்டங்களில் தலா இரண்டு நாட்கள் தங்கி வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டோம். இக்கால எல்லை மக்களின் கருத்தறிய போதுமானதல்ல என்பதை நாம் நன்கறிவோம். ஆனால், உரிய காலத்தில் அறிக்கையை தயாரித்து முடிக்க வேண்டிய நிலையில் கால அவகாசத்தை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒவ்வொரு மக்கள் சந்திப்பின் போதும் பெரும் தொகையான மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். இது தவிர எழுத்து மூலமும் பலர் தமது கருத்துக்களை தபால் மூலமும் மின்னஞ்சல், தொலைநகல்கள் மூலமும் தமது யோசனைகளை சமர்ப்பித்தனர். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள் ஐயாயிரத்தைத் தாண்டியது. அறிக்கையை தயாரிக்க நடவடிக்கை எடுத்த நிலையிலும் மக்கள் கருத்துக்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தன.
இதிலிருந்து மக்கள் அரசியலமைப்பு, அரசியல் இரண்டிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர் என்பதை அவதானிக்க முடிந்தது. இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசியலமைப்பொன்றை உருவாக்க மக்கள் கருத்தறியும் திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்தது. பிரதமரின் ஆலோசனைக்கமையவே இது அமைக்கப்பட்டது.
மக்களின் கருத்துக்களை நாம் திரிபுபடுத்தாமல் மும்மொழிகளிலும் பதிவு செய்துள்ளதோடு எமது குழுவின் சிபாரிசுகளையும் முன்மொழிந்துள்ளோம்.
மக்கள் சமர்ப்பித்த யோசனைகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதகால உழைப்பின் பிரதிபலன் தற்போது பிரதமர், சபாநாயகர், அரசியலமைப்புச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ம் திகதியன்று ஜனாதிபதியை சந்தித்து அறிக்கை கையளிக்கப்படும்.
அரசியலமைப்புச் சபையிடமே அடுத்த பணி உள்ளது. எமது ஆரம்ப பணிகளை நிறைவு செய்துள்ளோம். எதிர்காலத்தில் அரசியலமைப்புச் சபையின் நிபுணர்கள் குழு இவ்விடயங்களை ஆராயும் போது எமது ஒத்துழைப்பு கோரப்பட்டால் அதனை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.
நாட்டு மக்கள் சிறப்பான அரசியலமைப்பொன்றை எதிர்பார்ப்பதாகவும் அது ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய எந்த அம்சமும் அரசியலமைப்பில் உள்வாங்கப்படக்கூடாதெனவும் பெரும்பான்மையானோர் யோசனை தெரிவித்திருக்கின்றனர்.
இந்த அறிக்கையில் மக்களின் கருத்துக்களை ஒருவார்த்தை கூட திரிபுபடுத்தாமல் மும்மொழிகளிலும் பதிவு செய்திருப்பதோடு அதனோடு இணைந்ததாக எமது சிபரிசுகளையும் வழங்கி இருக்கின்றோம்.
எம்மால் சிபாரிசை மட்டுமே செய்ய முடியும் உத்தரவிடலோ கட்டாயப்படுத்தவோ முடியாது. அதனைச் செய்வதும் கைவிடுவதும் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையையும் சாரந்தது.
ஆனால், கடந்தகால நிலைமைகளையும் தற்காலப் போக்கையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டுமென்பதை நாம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். மக்களின் அழுத்தங்களே கருத்துக்களாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றை உதாசீனப்படுத்துவது உகந்ததல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

By

Related Post