Breaking
Tue. Dec 24th, 2024

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுதும் யுகத்தை ஏற்படுத்த அணி திரளுமாறு நாட்டை நேசிக்கும் அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடை பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையயழுத் திட்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியுடன் மஹிந்த ராஜபக்ச­வை தோற்கடிக்க முடிந்தது. 100 நாள்களில் தியாகங்களை செய்து 19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வர மேற்கொண்ட முயற்சி தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவை பாராட்ட வேண்டும்.
தனிப்பட்ட ரீதியில் இது எமக்கு பாதிப்பானது. நாட்டுக்கு சேவை யாற்றவே நாங்கள் அரசியலுக்கு வந்தோம். அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ள நாங்கள் வரவில்லை.
இறுதி நேரத்தில் எடுத்த தீர்மானம் காரணமாக எம்மால் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் சின்னத்தில் மாற்றங்களை செய்ய முடிவில்லை.
நல்லாட்சிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடன் ஏனைய அனைத்து சக்திகளையும் இணைத்து எங்கள் மனதை தேற்றிக் கொண்டுள்ளோம். மாதுளுவாவே சோபித தேரர் உட்பட அனைத்து சக்திகளின் ஆசீர்வாதத்துடன் நாங்கள் இந்த பணிகளை மேற்கொள்வோம்.
புதிய அரசாங்கத்தை அமைக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பலர் இந்த பக்கம் வருவார்கள். படித்த, புத்திசாலித்தனமான அரசியல்வாதிகள் ஒன்றாக இணைவார்கள். ஜனவரி 8 ஆம் திகதி வழங்கிய ஆணையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எமக்கு மீண்டும் ஆணையை தருமாறு மக்களிடம் கேட்கிறோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எமக்கு செய்து கொள்ள முடியாது போன 20 ஆவது திருத்தச் சட்டத்தை செய்து முடிக்க எமக்கு ஆணையை வழங்குமாறு மக்களிடம் கோருகின்றோம்.
திருடர்கள், வன்முறையாளர்கள், மோசடி இல்லாத தூய்மையானவர்கள் தெரிவாகும் வகையில் தேர்தல் முறை ஒன்றை நாங்கள் ஏற்படுத்துவோம். 100 நாள்களில் பெரும் வேலைகளை செய்தோம்.
பாரிய பொருளாதார முன்னேற்றத்தையும் மறுசீரமைப்பையும் ஏற்படுத்தினோம். ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்தினோம். என்றார்.

Related Post