– எஸ்.ஜே.பிரசாத் –
டொக்… என்ற அந்த ஒற்றைச் சத்தம் மட்டும்தான் கேட்கும். திரும்பிப் பார்க்கையில் பந்து பவுண்டரி கயிற்றைத் தொட்டிருக்கும்.
இனி அந்த சத்தம் கேட்காது…
ஆட்டமிழந்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டால் நடுவரின் கை மேலெழும்பும்வரை காத்திருக்காது நேர்மையாக தானே வெளியேறும் போது ஒரு சிறு புன்னகை முகத்தில் பூக்கும்.
இனி அந்தப் புன்னகை இருக்காது…
உலகில் எங்கு விளையாடினால் ரசிகன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் இவனுக்காக அந்த ரசிகனின் கைகள் தட்டப்படும்… இனி அந்தக் கைத்தட்டல் இருக்காது…
இலங்கையின் டொன் பிரட்மன் என்று வர்ணிக்கப்படும், Gentleman கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார். சங்காவின் பிரியாவிடை வைபவம் நடக்கும்வரை அடக்கிவைத்திருந்த கண்ணீரை வைபவம் முடிந்தவுடன் அழுது தீர்த்தது வானம். ஆம் வைபவம் ஆரம்பிப்பதற்கு முதல் மழை… நிகழ்வு முடிந்தபின்பும் மழை. இடையில் சங்காவின் பிரியாவிடை.
இலங்கை –- இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் முன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியோடு சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்றார். இந்நிகழ்வு நேற்று கொழும்பு பி.சரா ஓவல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது.சங்கக்காரவை வழியனுப்பி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு சரா ஓவல் மைதானத்திற்கு வந்திருந்தனர். அத்தோடு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க,இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் சுனில் கவாஸ்கர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது திடீரென அறிவிப்பொன்றின்மூலம் சங்காவுக்கு உச்சபட்ச கௌரவத்தை வழங்கினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அதுதான் சங்காவை பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராக்குவதான அழைப்பு. அந்த அழைப்பை ஜனாதிபதி விடுத்தவுடன் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களின் ஆரவார கரகோஷம் அடங்க சிறிது நேரம் ஆயிற்று.
அள்ளிக்கொடுத்த நினைவுப் பரிசில்களும் பாராட்டுக்களும் ஒருபக்கம், பதினைந்து வருடங்களாக விளையாடிவந்த கிரிக்கெட்டை விட்டு விடைபெறுகிறோம் என்ற கவலை இன்னொருபக்கம் இருக்க இறுதியில் மைக்கை கையில் எடுத்த சங்கா, ” நான் கல்விகற்ற டிரினிட்டியில் கற்றதும் பெற்றதும் மிக மிக அதிகம், அங்கு பெற்றுக் கொண்ட கிரிக்கெட்டின் அடிப்படை பயிற்சிக்காக நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். சுனில் பெர்னாண்டோதான் எனது ஆரம்பகால பயிற்சியாளர். அவர் ஆரம்பித்து வைத்த இந்தப் பயணத்தில் நான் 15 வருடங்கள் பயணித்திருக்கிறேன்.
எனது அனைத்து முன்னாள் தலைவர்களுக்கும், என்னோடு விளையாடிய சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு வந்த சங்கா, தனது பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டன. நா தழுதழுக்க ஆரம்பித்துவிட்டது குரல். எனக்கு ஊக்கசக்தி யார் என்று என்னிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள். இதோ இப்போது சொல்கிறேன் என்னுடைய ஊக்கசக்தி எனது பெற்றோர்தான். அம்மாவுக்கும் அப்பச்சிக்கும் நன்றி. (அழுதுகொண்டே பேசுகிறார்)
எனது பெற்றோருக்கு நான் மகனாக பிறந்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் எப்போதும் உணர்ச்சிவசப்படுபவன் இல்லை. எனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் குழுமியிருக்கும் இந்த தருணத்தில் எனது கண்ணில் இருந்து நீர் கொட்டத்தான் செய்கிறது. அது அப்படி கொட்டத்தான் செய்யும்.
விராட் மற்றும் இந்திய அணிக்கும் இந்த தருணத்தில் நன்றி. உங்களது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. நல்ல தரமான கிரிக்கெட் ஆட்டத்தை எங்களுக்கு எதிராக ஆடிக் காட்டினீர்கள். ஓய்வு பெறும் இந்த தருணத்தில் உங்களுக்கு எதிராக கடினமான கிரிக்கெட்டை ஆடியது எனக்கு மனநிறைவைத் தருகிறது. நாங்கள் உங்களை வீழ்த்துவதற்கு திட்டமிட்டு அதில் தவறியிருக்கிறோம். எனினும் இந்த தருணத்தில் எங்களுடன் இருப்பதற்கு உங்களுக்கு நன்றி”.
இத்தோடு எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணவேண்டாம். கெத்தாரமையில் அல்லது காலியில் ஏன் இந்த மைதானத்தின் கெலரியில் இருந்து நான் கிரிக்கெட் பார்த்து கிரிக்கெட்டோடுதான் வாழ்ந்துகொண்டிருப்பேன். கெலரியிலிருந்து போட்டியைப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதற்குப் பழகித்தானே ஆகவேண்டும்.
இலங்கை அணிக்கு வாழ்த்துக்களையும் அஞ்சலோ மெத்தியூஸுக்கு உற்சாகத்தையும் கொடுத்து விடைபெறும் தறுவாயில் கூறினார்… மூன்றாவது போட்டியை இலங்கை வெல்லும் என்று…
அந்த ஒற்றை வார்த்தை போதும் இலங்கை அணி தொடரை வெல்லும்…
சூரியன் மறைத்த நட்சத்திரம்
இந்திய –- இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றுவந்த 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதில் இந்தியா 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1–-1 என சமநிலைப்படுத்தியது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதனால் இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். அல்லது இந்தியா வெற்றி பெற்று தொடரை சமநிலைப் படுத்தும் என்ற பேச்சுதான் தொடக்கம் முதலே இருந்திருக்க வேண்டும்.
ஆனால், வெற்றி-தோல்வி என்ற பேச்சை விட, சங்கக்காரவின் கடைசி போட்டி என்பதால் போட்டியின்போது அவரைப்பற்றிய பேச்சுதான் முன்னிலையில் இருந்தது.
நான்காவது நாளிலிலேயே சங்கா ஆட்டமிழந்ததால் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்ட சங்கக்கார நேற்றைய போட்டியை பார்வையாளர் அரங்கிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய சங்கா மிகவும் சோகமாக காணப்பட்டார். இறுதியில் இலங்கை அணி தோல்வியடைய இந்திய அணி பெரிதாக ஆர்ப்பரித்து வெற்றியை கொண்டாடவில்லை.
சங்கக்கார மைதானத்திற்கு வந்து ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றார். இந்திய வீரர்கள் கைகுலுக்கி அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்திய அணித் தலைவர் கோஹ்லியுடன், நீண்ட நேரம் அவர் உரையாடினார்.
இந்த வெற்றி கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இளம் நட்சத்திரமாக ஜொலிக்க காத்திருக்கும் கோஹ்லிக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஆனாலும் சங்கக்கார எனும் சூரியனின் பிரியாவிடையால் கோஹ்லி எனும் நட்சத்திரம் மறைந்துவிட்டது.
இலங்கையின் டொன் பிரட்மன்
உலகின் தலைசிறந்தக் கிரிக்கெட் வீரராகக் கருதப்படுபவர் அவுஸ்திரேலியாவின் சேர். டொன் பிரட்மன். இவர் 12 இரட்டைச் சதங்களை விளாசியவர் என்கின்ற மிகப்பெரிய சாதனையை தன்னகத்தே கொண்டிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக 11 இரட்டைச் சதங்கள் விளாசிய ஒரே வீரர் நமது நாயகன் குமார் சங்கக்காரதான். அதனால்தான் இவரை சேர்.டொன் பிரட்மனுக்கு ஒப்பீடாகக் கருதுகிறார்கள்.
இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்கார 233இன்னிங்ஸ்களில் 12,400 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார். 54.19 என்ற அதிகபட்ச சராசரியுடன் இருக்கிறார். இதில் 38 சதங்கள் மற்றும் 52 அரைச்சதங்கள் அடங்கும். அதிகபட்ச தனிப்பட்ட ஓட்டங்களாக 319 ஓட்டங்களைச் சேர்த்திருக்கிறார்.
அவுஸ்திரேலியா – நியூஸிலாந்தில் இவ்வருடம் நடந்து முடிந்த உலகக் கிண்ணத்தோடு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற சங்கக்கார, 404 போட்டிகளில் விளையாடி 14,234 ஓட்டங்களைக் குவித்துள்ளார், சராசரி 41.98 ஆகும். இதில் 25 சதங்களையும், 93 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார் சங்கா.
போராட்டம், ஏமாற்றம், வெற்றி, தோல்வி, பல சறுக்கல்கள் என தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்த சங்கா இறுதியில் அனைத்து ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்திவிட்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்துவிட்டார்.கிரிக்கெட் உள்ளவரை சங்காவின் பெயர் நிச்சயம் நிலைத்து நிற்கும்.
நாட்டிற்காகவும் இலங்கை கிரிக்கெட்டிற்காகவும் சங்கா செய்த அர்ப்பணிப்புகளுக்கு நன்றி…
உங்கள் விளையாட்டால் எமக்கு கிரிக்கெட் விருந்து படைத்ததற்கு மிக்க மிக்க நன்றி…
நன்றி சங்கா.. வாழ்த்துக்கள்… சங்கா…