முஸ்லிம்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டவன் நான். முஸ்லிம்கள் நீங்கள் இந்த புனித ரமழானில் நோன்பு நோற்றுக் கொண்டு கேட்கும் துஆ பிரார்த்தனைகளை இறைவன் அங்கீகரிக்கிறான்.
நோன்பு பிரிவினை, சூழ்ச்சி, குரோதம், கெட்ட குணங்கள் என்பவைகளை உங்களிலிருந்தும் அகற்றிவிடுகிறது. முஸ்லிம்கள் நீங்கள் துவேசம், குரோதமற்ற நாட்டை உருவாக்குவதற்கு நிச்சயம் உதவி செய்வீர்கள் என நம்புகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதுவிட்டு அவர் குருநாகல் நகரிலுள்ள மஸ்ஜிதுல் ஜாமியுல் அஸ்ஹரில் முஸ்லிம்களைச் சந்தித்தார்.
பள்ளிவாசலில் தன்னை வரவேற்ற மக்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் முஸ்லிம்கள் இந்நாட்டின் தேசிய ஒற்றுமைக்குப் பாடுபட்டு வந்த ஒரு சமுதாயம். தேசிய நலனிலும் அக்கறை கொண்ட சமுதாயம். இந்த சமூகம் எதிர்காலத்திலும் இந்நாட்டின் தேசிய ஒற்றுமைக்குத் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
நோன்பு காலத்தில் நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
நோன்பினால் பாவங்கள் மறைந்து புனிதர்களாக இருக்கும் உங்களது பிரார்த்தனைகள் நாட்டை நேர்வழியில் இட்டுச் செல்லட்டும் எனக்காக நீங்கள் செய்த துஆ பிரார்த்தனைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றார். துஆ பிரார்த்தனையை மௌலவி ஹாரிஸ் நடாத்தினார்.
நிகழ்வில் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் அஹமட் தஹ்லான் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பர்ணாந்து, அநுர பிரியதர்சன யாப்பா, ஜயரத்ன ஹேரத், ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் சார்பில் நகீப் மௌலானாவும் கலந்து கொண்டனர்.
-Vidivelli-