பஹ்ரைனில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர், தான் பணி புரிந்த வீட்டை விட்டு தப்பிச் செல்லு முன், வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 48 வயதான குறித்த இலங்கை பணிப்பெண் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, தனது அறையில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார் என இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த பணிப் பெண் செல்லு முன் பாதுகாப்புக் கெமராவை துணியால் மறைப்பது பதிவாகியுள்ளது. பணிப்பெண் தங்கும் பகுதியில் 70 சதவீதம் எரிந்துவிட்டதாக நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தான் தீ வைக்கவில்லையென குறித்த பணிப் பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
எஜமானர்களின் கொடுமை காரணமாகவே வீட்டை விட்டு தப்பி ஓடியதாக கூறியுள்ள அவர், தனது எஜமானி தன்னை மோசமாக நடத்தியதாகவும் அதிகளவு வேலை கொடுத்ததாகவும் கூறினார். தான் முதலில் பாதுகாப்பு கெமராவை துணியால் மறைத்ததாகவும் எனினும் தப்பிச் செல்லு முன் அது சேதமடைந்து விடுமோ என்ற பயத்தில் துணியை அகற்றியதாகவும் பணிப் பெண் குறிப்பிட்டுள்ளார். இதேவளை, தனது மகன் முதலில் தீ பரவுவதை கண்டு தன்னை நித்திரையில் இருந்து எழுப்பியதாக 47 வயது எஜமான் கூறினார். நீதிபதிகள் மே மாதம் 14ம் திகதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.