இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் ஆறு வருடங்களில் வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி பணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் 31ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில் அது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இரண்டாவது தடவையாக தற்போது இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 2009ஆம் ஆண்டு 22 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த பான் கீ மூன் அப்போது யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கவில்லை. வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களை பார்வையிட்டுச் சென்றிருந்தார்.
அதன் பின்னர் ஆறு வருடங்களில் அப்போதைய அரசாங்கம் இம்மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு போன்றவிடயங்களில் அதீத கவனம் எடுத்திருந்தது. அத்தோடு கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தியது. வீதிகள், பாடசாலைகள், அரச திணைக்களங்கள், நிறுவனங்களின் மீள் நிர்மாணத்திற்கு பாரியளவில் செலவினங்களை செய்தது.
ஒரு சமூகம் அன்றாட வாழ்க்கையை சுமுகமாக கொண்டு செல்வதற்கு இயலாத சூழலில் நாம் நல்லிணக்கம், சகவாழ்வு பற்றி கலந்துரையாடுவதென்பது பயனற்றவிடயமாகும். ஆகவே தான் நாம் முதலில் அபிவிருத்திகளின் ஊடாக வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு, வட மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை ஏனைய மாகாணங்களுக்கும் மக்களுக்கும் நிகராக முன்னேற்றுவது என்ற கருதுகோளை முன்னிலைப்படுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.
ஜனவரி எட்டாம் திகதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை திசைதிருப்பி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். புதிய அரசாங்கம் உருவாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. வடக்கு கிழக்கில் எவ்விதமான முன்னேற்றகரமான செயற்றிட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை நிறைவு செய்துவிட்டு தேசிய நல்லிணக்கம் சகவாழ்வு என பேச்சளவில் மட்டும் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதே யதார்த்தமான விடயமாகும். எவ்வாறாயினும் தற்போது தேசிய நல்லிணக்கம், சகவாழ்வு தொடர்பிலான நிலைமைகளை அவதானிப்பதற்காக வருகை தரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொடிய யுத்தம் நடைபெற்ற இடங்களில் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான ஆறு ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்றார்.