ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உப ஜனாதிபதி போன்று செயற்படுவ தாக குற்றம் சாட்டியுள்ள மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அமைச்சர்கள் பலர் அவரை “சேர்” என அழைத்த சந்தர்ப்பங்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது சமூக வலைத்தளங்களை பார்க்கும் போது இளைஞர், யுவதிகள் அரசியல் ரீதியாக தெளிவான நிலையில் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலை விடவும் இம் முறை 95சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர், யுவதிகளுக்கு உண்மை நிலைமை புரிந்துள்ளது. அத்துடன் அவர்கள் அரசாங்கத்தின் மாயைக்குள் வீழ்ந்திருக்கவில்லை என்பது புலப்பட்டுள்ளது.அரசாங்கம் என்பது வேறு. அரச நிறுவனங்கள் என்பது வேறு. அரச நிறுவனங்கள் மக்கள் சார்பாக செயற்படுவதற்காக உருவாக்கப்பட்டதே தவிரவும் மாறும் அரசாங்கங்களுக்கேற்ப செயற்படுவதற்கு உருவாக்கப்படவில்லை.
ஆனால் தற்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அரசாங்க நிறுவனங்களின் பிரதான கணக்காளர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கான செலவீனத்தைக் குறைத்து திறைசேரி நிதி யை ஜனாதிபதி தேர்தலுக்கென மீதப்படுத்துமாறு கூறியுள்ளார். இவ்வாறான செயற்பாடொன்று கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கவில்லை. பல வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் செயற்பட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கள் 2010ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட அமைச்சரின் கீழ் இருக்கும் பொரு ளாதார அமைச்சிடம் வேலைத்திட்டங்களுக்காக கோரவேண்டிய சோக நிலைமை காணப்படுகின்றது.
இம்முறை தேர்தல் அறிவிப்பைச் செய்தபின்னர் ஜனாதிபதி எம்முடன் அலரிமாளிகையில் கலந்துரையாடினார். தேர்தல் தொடர்பாக கூறியபோது எந்த ஒரு அமைச்சரும் வாய்திறக்காது மௌனமாகவே இருந்தனர். தொடர்ந்து எனது அருகிலிருந்த ராஜித சேனாரட்ன கடந்த தேர்தல் அறிவிக்கப் பட்ட போது அனை த்து அமைச்சர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரித்திருந்ததாக கூறினார்.ஜனாதிபதியே உங்களுடைய பிரச்சினையை கூறுங்கள் எனக்கோரிய போதும் அவருக்கு முன்னால் தமது கருத்துக்களை முன்வைக்காது இருந்தனர். காரணம் அவர் கள் அச்சத்துடன் இருக்கின்றார்கள்.
இன்று இளைய சமுதாயம் பற்றி நாம் சிந்தித்தால் இந்த நாட்டில் ஒரேயொரு இளைஞர் மட்டுமே இருக்கின்றார். அவர் வேறு யாருமல்ல நாமல் ராஜபக்ஷ. இவர் பல்வேறு தீர்மானங்களை எடுப்பார். ஜனாதிபதி எடுக்க வேண்டிய முடிவைக் கூட எடுப்பார். ஏறக்குறைய உப ஜனாதிபதி போன்றே செயற்படுகின்றார். பல அமைச்சர்கள் அவரை “சேர்” என அழைத்த சந்தர்ப்பங்களை நான் நேரில் கண்டுள்ளேன் என்றார்.