Breaking
Wed. Nov 20th, 2024
நாம் உளவியல் ரீதியில் எம்மிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் தெரிவித்தார்.

மேல் மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்தால், மேல் மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு நேற்று (15) எம்பிலிபிட்டிய இராணுவ முகாமில் இடம்பெற்றது. பேருவளை, புலத்சிங்ஹல, ஹொரணை, திவுலப்பிட்டிய ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் கூறியதாவது,

எமது நாட்டில் காலத்துக்கு காலம் ஒவ்வொரு விடயமும் மாற்றம்பெறுகிறது. எமது நாட்டில் மாற்றமே இல்லாதது ஒரேயொரு விடயம்தான். நாமும் , எமது பெற்றார், எமது பாட்டன், பூட்டன் கற்கும் காலம் தொட்டு இன்றுவரை கற்பிப்பது “இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடு” இதைத் தவிர மற்ற அனைத்துமே மாறி விட்டன. எமக்கு கீழிருந்த பல நாடுகள் இன்று எம்மை தாண்டி முன்னேறிவிட்டனர். இதற்கு ஒரே காரணம் அவர்களது உளவியல் மாற்றங்கள்தான்.

நாமும் எமது மக்களும் பொறாமையை விட்டுவிட்டு, முன்னேறுபவனை காலால் இழுத்து, கீழே விழ வைக்கும் தன்மையை விட்டுவிட்டு உள்ளங்களை எப்போது மாற்றுவோமோ, அப்போதுதான் இந்த நாடும் “அபிவிருத்தியடைந்து வரும் நாடு” எனும் நிலையிலிருந்து மாறும்.

இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையினதும் முன்னேற்றம்தான் இந்த நாட்டின் முன்னேற்றம். இதனை நாம் உணர்ந்து செயற்பட வேண்டு. எம்மில் ஒரு சிலர், பிறர் முன்னேற்றத்தை பார்த்துப் பொறாமையில் கனைத்தவர்களாகவே இருக்கிறார்கள். இதனால் தடுக்கப்படுவது கனைப்பவர்களது முன்னேற்றமும், இந்த நாட்டின் முன்னேற்றமுமே ஆகும். ஆகவே பொறாமைகளுக்கு அப்பால் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே முன்னேறி, நாட்டை முன்னேற்ற முயற்சிக்க வேண்டும் . பிரதேச உறுப்பினர்கள் என்ற வகையில் மக்களுக்கு அந்த மனநிலையை உருவாக்கும் பொறுப்பு எமக்குமுண்டு.

மேலும், நாம் அநீதிகளுக்கு ஒத்தாசை புரிந்தும், சட்டத்துக்கு முரணான வேலைகளில் ஈடுபட்டும், அதிகாரத் துஷ்பிரயோகத்தினாலும் தலைவர்களாக நினைக்காமல், நாம் எம்மை தலைமைத்துவப் பண்புகளைக்கொண்டு வளர்ப்பதன் ஊடாகவும், மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவையை நேர்மையாக செய்வதனூடாகவும் உரிய இடத்தை அடைந்துகொள்ளவேண்டும் என்றார்.

இதன்போது குப்பை அகற்றல், வீதி மின் விளக்கு, வடிகான் திட்டங்கள் , வாய்க்கால் திட்டங்கள், உள்ளூராட்சிமன்ற சந்தைத் தொகுதிகள், வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவு நீர் என்பவை சம்பந்தமான விஞ்ஞான ரீதியான பொறிமுறையுடன் கூடிய விசேட திட்டங்களும் உறுப்பினர் ஹஸீப் மரிக்காரால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post