Breaking
Fri. Nov 15th, 2024
தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மர்ஹூம் அஷ்ரப் எழுதிய எழுச்சிப் பாடல்களை தெருக்களிலும் மேடைகளிலும் ஒலிபரப்பி உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உட்பட பிரதேச அரசியல்வாதிகள் பலர் உரையாற்றினர்.
அமைச்சர் றிஷாத் மேலும் கூறியதாவது..
நாங்கள் தேர்தல் காலங்களிலும், அதற்கு முன்னரும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம். எஞ்சியவைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். வாக்குக்காக மட்டும் இந்தப் பிரதேசத்துக்கு வந்து போகின்றவர்கள் அல்லர் நாங்கள். நீங்கள் படுகின்ற கஷ்டங்களையும்,  – துன்பங்களையும் நாங்கள் அறிவோம். எனக்கு கிடைத்துள்ள மகஜர்களும், கடிதங்களும் இந்தக் கஷ்டங்களுக்கு சான்றுகளாக உள்ளன. ‘என்னுடைய காணியில் என்னைக் குடியேற அனுமதியுங்கள்’ என ஒரு பொதுமகன் என்னிடம் கடிதம் ஒன்றைத் தந்தார். என்ன அநியாயம் இது? நம்முடையை காணியில் நாம் குடியேற முடியாத அவல நிலையிலே வாழ்கின்றோம். இதே போன்றுதான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் கதியும் இருக்கின்றது. இந்தக் கஷ்டங்களை நானும் அனுபவித்தவன்தான். அகதி வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்பதை நான் உணர்ந்துகொண்டவன்.
இந்த ஆட்சியிலாவது முஸ்லிம் சமூகத்துக்கு விமோசனம் கிடைக்கும் என நாம் இன்னுமே நம்புகின்றோம். எங்களுக்கும் விடிவு கிட்ட வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இந்த நல்லாட்சியின் உருவாக்கத்தில் எமது சமூகத்தில் உள்ள ஏறத்தாள 95 சதவீதமானவர்களுக்கு பங்குண்டு. அதை எவரும் மறுக்கவும் முடியாது. மறந்து வாழவும் முடியாது.
கடந்த ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்களை, கொடூரங்களை தாங்க முடியாமலேயே நாம் ஆட்சி மாற்றத்தை விரும்பினோம். இறைவனும் எமக்கு துணை செய்தான். நல்லாட்சியின் பங்காளியாக நமது சமூகம் மாறியதற்கு ஒரே காரணம் எமது இதயமான குர்ஆனை நிந்தித்ததும், பள்ளிவாயலை உடைத்ததும் நமது சகோதரிகளின் பர்தாக்களை கழற்றி வீச எத்தனித்ததுமே.
எம்மை கொடுமைப்படுத்திய இனவாதிகளின் மீது மஹிந்த அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது மௌனம் காத்தது.
எனவே, முஸ்லிம் சமூகம் கடந்த ஆட்சிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக திரண்டது. ஆட்சியின் பங்காளியாக இருந்த எமது கட்சி எத்தனையோ தடவை அரசுத்தலைமையுடன் இந்த விடயங்கள் பற்றி சொல்லிப் பார்த்தது. கெஞ்சிப் பார்த்தது. அமைச்சரவையில் நாம் கொதித்தெழுந்தோம். ஆனால் ஆட்சியாளர்கள் எதற்கும் அசைந்து கொடுத்ததாக தெரியவில்லை. எதோ ஒரு பின்புலத்தில் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல் ஓடியது. சிறுபான்மை பற்றி எந்தக் கவலையுமே இல்லாது பெரும்பான்மை வாக்குகளை மையமாகக் கொண்டே கடந்த ஆட்சியாளர்கள் செயற்பட்டது. நீதி செத்துக் கிடந்தது. அநீதி தழைத்தது. முஸ்லிம்கள் செய்வதறியாது தடுமாறினர்.
இந்த சமயத்தில்தான் தென்னிலங்கையிலும் ஆட்சி மாற்றத்தின் தேவை வெகுவாக உணரப்பட்டது.
மகிந்தவின் அடக்கு முறையில் அதிருப்திகொண்ட எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் (தற்போதைய ஜனாதிபதி மைத்திரி உட்பட) அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிரணியில் இணைந்தனர். இன்னும் 22 எம்.பி க்கள் தம்முடன் வரவிருப்பதாக அறிவிப்பையும் செய்தனர். ஆனால் இரண்டு வாரங்களாகியும் எதுவுமே நடக்கவில்லை. அந்த வேளையில்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை தீர்க்கமான முடிவொன்றை எடுத்தது. தபால் வாக்களிப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் எவருமே எதிர்பார்த்திராதஇ எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மஹிந்தவின் அரசை விட்டு நாம் வெளியேறினோம். பதவிகளையும்அதிகாரங்களையும் தூக்கி எறிந்தோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஆட்சிக்குக் கொண்டு வர நாம் பாரிய பங்களிப்பை நல்கியவர்கள். அரசுத் தலைமையுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள். எனினும் அந்த ஆட்சியின் இறுதிக்காலப் பகுதியில் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தாங்க முடியாமலேயே நாமும் வெளியேற நேர்ந்தது. எங்களை அச்சுறுத்தினார்கள். உயிருடன் இருக்கமாட்டீர்கள் என மிரட்டினார்கள். இறைவனின் மீது பாரத்தைப் போட்டோம்.
முஸ்லிம் சமூகம் முழுமையாக ஒன்றுபட்டதனாலேயே மைத்திரியின் வெற்றி சாத்தியமாகியது. உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு நான் கூற விரும்புகின்றேன். கற்பிட்டியில் வாழ்ந்து வரும் மன்னாரைச் சேர்ந்த பெண்மணியொருவர் அவரது வாழ்க்கையிலே என்றுமே வாக்குச் சாவடிப் பக்கம் செல்லாதவர். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் மீதான கவலையினால் ஜனாதிபதி மைத்திரியை வெல்ல வைப்பதற்காக கற்பிட்டியில் இருந்து மன்னார் கூழாங்குளத்திற்கு சென்று வாக்களித்தார். இவ்வாறு நமது சமூகம் பல்வேறு தியாகங்களை செய்துள்ளது. இதனை மறந்து எவரும் எம்மை இரண்டாந்தர பிரஜையாக பார்க்கக் கூடாது.
முஸ்லிம்களின் சமூகக் கட்சியென தம்மைப் பீற்றித்திரியும் முஸ்லிம் காங்கிரஸ் நல்லாட்சி உருவாக்கத்துக்கு வழங்கிய பங்களிப்பு என்ன? உங்கள் மனச் சாட்சியை தொட்டுக் கேளுங்கள். தபால் வாக்களிப்புக்கு முந்தைய நாள் ‘நீங்கள் மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என அறிவிக்கப்டுகின்றது’ ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெளியேற்றம் அந்தக் கட்சிக்கு பெரிய தலையிடியாக மாறியது. இதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரியுடன் கைகோர்க்கின்றது. வீராப்பு வசனங்களைப் பேசி மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றனர். இதுதானா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் சாணக்கியம்? ஒரு சமூகத்தின் தலைமையென மார்தட்டிப் பேசுபவர்களின் இலட்சணமா இது? இவ்வாறு சக்தியில்லாத முடிவெடுக்க முடியாத தலைமை ஒன்று இன்னும் நமக்குத் தேவைதானா? சிந்தித்துப் பாருங்கள்.
மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஒரு பேரம் பேசும் கட்சியாக மாற்றியமைத்தார். ஜனாதிபதியை உருவாக்கும் சமூகமாக நம்மை ஆக்கினார். அரசின் அநியாயங்களையும்இ புலிகளின் அட்டூழியங்களையும் அவ்வப்போது தட்டிக் கேட்ட ஒரு வீரத் தலைவர் அவர்.
நாம் கடந்த தேர்தலில் தூர திருஷ்டியுடன் செயற்பட்டதனால்தான் ஐந்து எம்.பிக்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. இன்னும் ஐந்து எம்.பிக்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்த போதும் அது கைகூடாமல் போய்விட்டது. இறைவனின் நாட்டம் வேறுமாதிரியாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் எம்.பி ஒருவரைப் பெற்றுகொண்டோம். எமது கட்சி அமைத்த வியூகமும் அனுராதபுர முஸ்லிம்களின் ஐக்கியமுமே இந்தவெற்றிக்கு வழிகோலியது. பெரும்பான்மை கட்சிகளுக்கு ஜயவேவா போட்டுக்கொண்டிருந்த அனுராதபுர மாவட்ட முஸ்லிம் சகோதரர்களை ஒன்றுபட வைத்ததனாலேயே துடிப்பானஇ நல்ல மார்க்க பக்தியுள்ள இளைஞர் ஒருவரை எம்.பியாக்க எம்மால் முடிந்தது. நாங்கள் முயற்சித்தோம். இறைவன் வெற்றியைத் தந்தான். எதிர்வரும் காலங்களில் நாம் பல்வேறு நலத்திட்டங்களை செயற்படுத்துவோம். அதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காண்போம் என உறுதியளிக்கின்றேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

By

Related Post