பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் அரசியல் பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்த நிந்தவூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்றைய தினம் (09) பிரதேச சபைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, பிரதேச சபையின் செயலாளர், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த அஷ்ரப் தாஹிர் எம்.பி,
“நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இங்கு வந்து நிற்பதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்தது இந்த பிரதேச சபையாகும். குறிப்பாக, அதனுடைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பின்றி, இந்த சபையை உச்சத்திற்கு கொண்டுசெல்ல என்னால் முடியாமல் போயிருக்கும்.
ஆனால், இங்கு கடமையாற்றிய அனைவரும், சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தீர்கள். அதனால்தான், இந்த சபையை முழு இலங்கையும் பேசுமளவிற்கு கொண்டுசெல்ல முடிந்தது.
மேலும், கடந்த காலங்களில் இந்த சபையினூடான பிரேரணைகள், செயற்திட்டங்களுக்கான முன்மொழிவுகளின் போது, எதுவித எதிர்ப்புக்களுமின்றி ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் கெளரவ உறுப்பினர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறினார்.