நிந்தவூர் பிரதேச சபையின் 9ஆவது கூட்டம் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது
இக்கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் அவர்களால் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும் சமூகமளித்திருக்கவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் சபையின் உப.தவிசாளருமான வை.எல். சுலைமான் லெப்பை அவர்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக பேசும்போது தவிசாளரால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டமானது முழுக்க முழுக்க மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதாக அமைத்திருக்கின்றது. இருப்பினும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் வருகை தராததால் அவர்களது பங்குபற்றுதலோடு எதிர்வரும் தினம் ஒன்றில் வரவு செலவுத் திட்டத்திற்கான கூட்டத்தை நடாத்த வேண்டும் என அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த தவிசாளர், இந்த வரவு செலவுத் திட்டத்தினை மக்கள் நலனுக்கான நல்லதொரு வரவு செலவுத் திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு, சபையின் வழமையான நடைமுறைக்கு அமைய அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலமாக அறிவித்திருந்தும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் அதற்கு மாற்றமாக நடந்திருக்கின்றனர்.
இன்றை தினத்தில் அவர்கள் அனைவரும் கொழும்பிற்கு செல்வதாகவும். சபை அமர்வை மற்றும் ஒரு தினத்தில் நடத்துமாறும் இன்று காலை சபைக்கு கிடைக்ககூடியவாரு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர் ஆனால் அக்கடிதத்தினை நிர்வாக ரீதியாக ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருப்பதால் கருத்திற்கொள்ளவில்லை முடியாத நிலை ஏற்பட்டுள்ளது( இருப்பினும் அவர்களில் பலர் ஊரில் உள்ளதை அறிய முடிகிறது) என்று பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எனது தலைமையிலான நிந்தவூர் பிரதேச சபையானது அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் கடந்த காலங்களிலும் தற்போதும் மக்கள் நலனை கருத்தில் கொண்டே செயல்பட்டு வருகிறது அது போலவே எதிர்காலங்களிலும் எமது செயற்பாடுகள் அமையும்.
இதைத்தான் கடந்த கூட்டங்களிலும் நிந்தவூர் பிரதேச சபையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எதுவுமில்லை அனைத்து உறுப்பினர்களும் ஒரு அணியில் நின்று நமது மக்களுக்கான சேவையினை திறம்பட செய்ய வேண்டும் என கூறியுள்ளேன் என்றார்.
இருப்பினும் உப. தவிசாளர் வை. எல் சுலைமாலெப்பை நடுநிலைவகிக்க ஏனைய உறுப்பினர்களால் எதிர்வரும் ஆண்டுக்கான (2019) வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.