Breaking
Sun. Dec 22nd, 2024
கல்வி அபிவிருத்தியின் முன்னோடியாக ஆரம்பக்கல்வியினை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் நோக்கில் நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அல்- ஹிக்மா பாலர் பாடசாலை கட்டிடம் (22) திறந்து வைக்கப்பட்டது.
 
நிந்தவூர் நெல்லித்தீவு பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையாகவிருந்த நிரந்தர பாலர் பாடசாலை கட்டிடடத் தேவைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில், குறித்த பாலர் பாடசாலை கட்டிடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
 
இப்பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையினை கவனத்தில் கொண்டு, நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களின் தீர்மானத்தின் பிரகாரம், உள்ளுராட்சி மன்றங்களின் உள்ளூர் மேம்பாட்டு (Local Development Support Project- LDSP) திட்டத்தினூடாக, நிந்தவூர் பிரதேசத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதனை அடிப்படையாக கொண்டு, முதற்கட்டமாக 68 இலட்சம் ரூபாய் நிதி மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் அவர்களும் கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.எம். கமல் நெத்மினி, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் ஆகியோரும், விஷேட அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை, கல்முனை கல்வி மாவட்ட செயற்திட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸஹீர், துறைசார் அதிதிகளாக கல்முனை வலய உதவிக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். ஸாஜித், கல்முனை வலய உதவிக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம். றசீன், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எம். ஷரீபுதீன், நிந்தவூர் பிரதேச சபை முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Related Post